சிங்கள தேசத்தை தமிழீழமாக மாற்ற ரணில் முயற்சி: வசந்த பண்டார
இலங்கை சிங்கள தேசமல்ல என்ற உளவியல் யுத்தத்தை நாட்டில் முன்னெடுத்து தனி தமிழீழத்தை உருவாக்கும் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இதற்காகவே யுத்த வெற்றி தினம் உயிர் நீத்தவர்களின் தினமாக பெயர் மாற்றம் பெற்றது என்றும் அவ்வியக்கம் தெரிவிக்கின்றது. அது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்த பின்னர் யுத்தத்தை முடித்தவர்கள் குற்றவாளி என்றும் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டது.
இன்று யுத்தத்தை முடித்தவர்கள் பின்னடைவை கண்டுள்ள சூழ்நிலையில் யுத்த வெற்றி தினத்தை பெயர் மாற்றி அதனை உயிர் நீத்தவர்களின் தினமான பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இலங்கையை பிரிக்கும் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே மேற்கொண்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் அடுத்த கட்டம்தான் இலங்கை சிங்கள தேசம் அல்ல என்பதாகும்.
வரலாற்றில் இலங்கை ‘ஹெல தேசிய, சிஹல தேசிய’ என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இவற்றை மூடி மறைத்து இது இலங்கை தேசமல்ல என்றும் மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான யுத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
இந்த உளவியல் யுத்தத்தை முன்னெடுத்து இலங்கை தமிழர்களும் ஆண்டார்கள். அவர்களுக்கும் பிரிந்து செல்வதற்கு உரிமையுண்டு என்ற நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இதன் பின்னணியாகும்.
படிப்படியாக 13 ஆவது திருத்தம் முன்னெடுக்கப்பட்டு வடக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும். அது இறுதியில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தும். அதன் இறுதி வடிவம் தனித் தமிழீழமாகும் என்றும் வசந்த பண்டார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply