மஹிந்த பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் விக்கிரமசிங்க

யாழ். மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு இந்நாட்டு சகல பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். இந்தசம்பவத்தை வைத்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அதிகாரத்தைக் கைப்பற்ற எதனையும் விற்பனை செய்ய மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கிறார். ராஜபக்ஷ ஆட்சியின் மீள்புரட்சியை தோற்கடிக்க வேண்டும். அவர்களை அரசியலில் மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது. அவர்களை முற்றாக ஒழிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களின் செயற் பாட்டாளர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ராஜபக்ஷ ஏகாதிபத்திய ஆட்சியை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக வெற்றிபெறச் செய்வதற்கு சமூக வலைத்தளங்கள் புரட்சியொன்றை ஏற்படுத்தின. இன்று உலக நாடுகள் எம்மை பார்த்து நோக்கும் அளவுக்கு ராஜபக்ஷ ஆட்சி தோற்கடிகப்பட்டுள்ளது. மோசடி, ஏகாதிபத்திய ஆட்சி தூக்கியெறியப் பட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாக செயற்படுகிறார்கள். நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மோசடி நிறுத்தப்பட்டுள்ளது. அனைவரிடமும் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. நாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நவீன சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டும்.

10 வருடமாக மக்களை அடக்கி ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் போராட்டம் நடத்த முடியாத நிலை இருந்தது. அண்மையில் வடக்கில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இன, மதம் பாராது சகலரும் கவலையை தெரிவித்துக் கொண்ட போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் ஆட்சியில் இல்லாததே இதற்கு காரணமென்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஆட்சி செய்திருந்தால் இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகியிருப்பார்கள். ஆனால், இன்று அந்த நிலைமை நிறுத்தப் பட்டுள்ளது.

அவரது ஆட்சிக் காலத்தில் தெற்கில் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் நூறு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக விருந்துபசாரம் செய்யும் அளவுக்கு நிலைமை காணப்பட்டது. அவ்வாறே 200 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபரும் இருக்கின்றார்.

நாம் பெண்களை துஷ்பிரயோகத்துக்கு இடமளித்ததாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாம் எவருக்கும் அவ்வாறு இடமளிக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்களாம். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு சகல பெண்களிடம் மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்பு கோர வேண்டும்.

கடந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ராஜபக்ஷ ஆட்சியால் முடியவில்லை. வடக்கில் இடம்பெற்ற துஷ்பிரயோகத்தை வைத்துக் கொண்டு மீள்புரட்சியை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

எந்தவொரு பெளத்த சிங்களவரும் நாட்டில் கசினோ ஆரம்பிப்பதற்கும், தலதா மாளிகையின் பெரஹெர நடந்து கொண்டிருக்கும் போது நைட் ரேஸ் நடத்துவதற்கும் வெளிநாடுகளில் போதைப்பொருட்களை கொண்டு வருவதற்கும் இடமளிக்க மாட்டார்.

எனவே, நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ராஜபக்ஷ ஆட்சியின் மிகுதி பகுதியையும் தோற்கடிக்க வேண்டுமென்று பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply