2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் மிரட்டினார்: ட்ராய் முன்னாள் தலைவர்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தம்மை மிரட்டியதாக, ட்ராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் குறிப்பிட்டுள்ளார். 2ஜி விவகாரத்தில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise என்ற பெயரில் பிரதீப் பைஜால் புத்தமாக எழுதியுள்ளார். அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், மத்திய அரசுடன் உரிய ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மன்மோகன் சிங் தம்மை மிரட்டியதாக பைஜால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திசை திருப்ப, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பைஜால் குற்றம்சாட்டியுள்ளார்.
2ஜி விவகாரத்தில், பிரச்னைகள் எப்படி தலைதூக்கின என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அத்தியாயத்தில், 2004ம் ஆண்டு, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதாக பைஜால் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
2ஜி விவகாரத்தில், தனது உத்தரவுகளை செயல்படுத்தத் தவறினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தயாநிதி மாறனும், தனக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததாக பைஜால் குற்றம்சாட்டியுள்ளார். டாடா ஸ்கை Tata Sky நிறுவனத்தை சன் டிவியுடன் இணைக்க வேண்டும் என டாடா நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ரத்தன் டாடாவை 2004ம் ஆண்டு தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் பைஜால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply