கொழும்பின் ராஜதந்திரி இரகசியமாக கே.பீயைச் சந்திப்பு

புலிகளின் பிரதான உறுப்பினர்கள் ஒன்று கூடும் பிரதான நாடாக கருதப்படும் மலேசியாவில் அதிகரித்து வரும் நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. கே.பி என சுருக்கமாக அழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தரான செல்வராஜா பத்மநாதன், தாய்லாந்தை விட்டு, மலேசியாவுக்கு சென்று முகாமிட்டுள்ளதாக அரசாங்கம் நம்புகிறது.

அதேவேளை கொழும்பில் உள்ள ராஜதந்திர வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் ரகசியமான முறையில் கே.பி.யை சந்தித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்கள் தொடர்பாக அவரை சந்தித்ததாக ராஜதந்திரி கூறிய போதிலும் புலிகளுக்கும் உதவும் வகையில் சர்வதேச ரீதியிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரச தரப்பு கருதுகிறது.

புலிகளுக்குச் சொந்தமான ஆயுதக் கப்பல்கள் பலவற்றை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர் எனினும் மலேசியாவில் செயற்படும் புலிகளின் அணியிடம் மேலும் சில கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றின் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவில் இடம்பெறும் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் குறித்து இலங்கை பாதுகாப்பு தரப்பினர் அந்த நாட்டுக்கு தெளிவுப்படுத்தியுள்ள போதிலும் அவற்றை ஒடுக்கும் நடவடிக்கைகள் மலேசியாவில் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் முகாமிட்டுள்ள புலிகளின் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சிலரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களை மலேசிய அரசாங்கம் அழிக்கத் தவறினால், அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக இருப்பாரென மற்றுமொரு அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply