‘ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் நடவடிக்கையே பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை”
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் நடவடிக்கையாக எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி, பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளோம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். மேலும் மைத்திரி அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதாக கூறிய இந்த அரசு தற்போது வைராக்கியமானதொரு ஆட்சியையே நடத்தி வருகின்றது எனவும் தெரிவித்தார்.
கொழும்பு நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
100 நாட்களில் மக்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினோம். தற்போது 100 நாள் முடிந்து மேலும் 50நாட்கள் நிறைவடைந்துள்ளன.
மேலும் 100 நாட்களில் மக்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. குறிப்பாக மக்களுக்கு வழங்குவதாக கூறிய மானியங்களை அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. மேலும் புனர்நிர்மாண பணிகளை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் கூறிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை அவர்களால் நிரூபிக்க முடியாமல் போயுள்ளது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ இந்த நாட்டில் மைத்திரி (கருணை) அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதாகக் கூறினார். ஆனால்இ பிரதமரோ இந்த நாட்டில் வைராக்கியமானதொரு ஆட்சியையே நடத்தி வருகிறார் .
எனவேதான் இந்த அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்தது. இதுவரையில் இந்த பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தமாக 130 பேர் இதில் கைச்சாத்திடுவர். அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் சிலரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி, பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை சமர்ப்பிப்போம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply