கடலில் தத்தளிக்கும் ஆசிய அகதிகளை மீட்க அமெரிக்கா நடவடிக்கை

கடல் பகுதியில் தத்தளிக்கும் ஆசிய அகதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சமீபகாலமாக வங்காளதேசம், மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளின் கடற்கரையோர எல்லைக்குள் புகுந்துள்ளனர். இவர்களில் 2,600க்கும் மேற்பட்டோர் இன்னும் கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் மலேசியாவின் வடக்கு எல்லைப்பகுதி புதை குழிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்களும், தாய்லாந்து எல்லையோர புதை குழிகளில் 36 பிணங்களும் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவை அகதிகளின் உடல்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இது, உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தங்களுடைய கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகதிகள் நுழைவதை தடுக்க தாய்லாந்தும், மலேசியாவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஆசியாவைச் சேர்ந்த 17 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தது.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை கமிஷன், ஐ.நா. அகதிகள் முகமை உள்ளிட்ட அமைப்புகளும் இதில் பங்கேற்றன. மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா நாடுகளின் சார்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாய்லாந்து துணை பிரதமர் தனாசக் பத்திமபிரகார்ன் பேசியதாவது:-

அகதிகள் பிரச்சினை பற்றி நாம் கவலைப்படுவதைவிட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு தீர்வு காண்பதுதான் மிக முக்கியமானது.

முதலில் அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வது, பின்பு மனிதர்களை இன்னொரு நாட்டுக்கு கடத்துவதை முறியடிப்பது, பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிந்து அதற்கு முழுமையான தீர்வு காண்பது ஆகிய மூன்றையும் செய்தாகவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி அன்னே ரிச்சர்டு, “தெற்காசிய கடல் பகுதியில் இன்னும் ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உயிரை உடனடியாக காப்பாற்றுவது அவசியம். இதற்கு உதவிட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

அவருடைய கோரிக்கையை தாய்லாந்து துணை பிரதமர் தனாசக் உடனடியாக ஏற்றுக் கொண்டார். ‘அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள் எங்கள் கடல் பகுதியில் அகதிகளை கண்டுபிடித்து மீட்கலாம். அதற்கு அனுமதிக்கிறோம்‘ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தாய்லாந்து கடல் பகுதியில் தத்தளிக்கும் 600-க்கும் மேலான அகதிகளை கண்டறிந்து மீட்கும் முயற்சியில் உடனடியாக இறங்கின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply