திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு
திருகோணமலையில் 6 வயது சிறுமி படுகொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரதான சந்தேக நபரின் சடலத்தை அவரது தாயார்அடையாளம் காட்டிய போதிலும் அதனைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் (வயது 26) என்ற இந்நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்திய பரிசோதனைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துத் தப்பியோட முயன்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த சந்தேக நபரின்தாயார் “கடந்த 3 வருடங்களாக இவருக்கும் குடும்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கணவரை விட்டு பிரிந்து நான் வாழ்ந்து வருகின்றேன்.இவரது சடலத்தை பொறுப்பேற்பதற்கும் நான் விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.
சடலத்தைப் பொறுப்பேற்கத் தாயார் மறுத்ததையடுத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறு பொலிஸாருக்கு மரண விசாரணையின் பின்பு மஜிஸ்திரேட் ரி.எல்.ஏ.மனாப் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து அவரது சடலம் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.
இச் சிறுமியின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருகோணமலை பொலிஸ் தகவல்களின் படி சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்றும் மற்றுமொருவர் தமிழ் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடையவர் என்றும், மேலும் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சிறுமிக்குக் கணினி கற்பிப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வருகின்றது. கணினி கற்பித்தவர் சிகரம் என்னும் இணைய வானொலி சேவையொன்றை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சிறுமி உவர் மலையிலுள்ள தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, மற்றும் இரண்டு சந்தேக நபர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை போன்ற தகவல்களும் தமது விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவற்றைத் தவிர, இந்தச் சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற சில கடத்தல் மற்றும் கப்பம் கோரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதே வேளை படுகொலை செய்யப்பட்ட சென்.மேரிஸ் மகளிர் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவியான ஜூட் ரெஜி வர்ஷாவின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply