உணர்ச்சியை தூண்டும் பேச்சுகளை நிறுத்த வேண்டும்: இலங்கை அரசுக்கு சுஷ்மா சுவராஜ் வற்புறுத்தல்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஓராண்டு நிறைவு செய்ததை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது:- கடந்த ஓராண்டில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு பெரிய அளவில் வெளிப்படைத்தன்மை கொண்டது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருதரப்பிலும் நான்கு முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் இருதரப்பிலும் மீனவர்களுக்கு இடையில் ஒரு இருதரப்புக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையை இலங்கை தரப்பினர் நிராகரித்து உள்ளனர். மீனவர்கள் பிரச்சினையை பொறுத்தவரை எங்கள் அரசாங்கத்துக்கு நல்ல புரிதல் உள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.

இருதரப்பிலும் எல்லை கடந்து மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைக் கடந்தும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தும் மீன் பிடிக்கின்றனர். இருதரப்பிலும் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே, இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறோம்.

இலங்கையின் தரப்பில் இருந்து அடிக்கடி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அவை போன்ற அறிக்கைகளும் பேச்சுக்களும் சுமுகமான தீர்வு பிறக்கும் வழிகளை அடைத்து விடுகிறது என்றும், உணர்ச்சிகளைத் தூண்டும் எந்த வகையான பேச்சுக்களையும் அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்றும், இதனை மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் எடுத்துக் கூறப்போகிறோம். அதன் பிறகு பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்று இருக்கிறோம்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இந்த ஓராண்டில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பெருத்த வெற்றியடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்த அரசாங்கம் மொத்தம் 101 நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஈராக் நாட்டில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று அங்கிருந்து தப்பித்த ஒருவர் கூறுகிறார் என்பது உண்மைதான். ஆனால் எனக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் அங்கு சிறைப்பட்டுள்ள 39 இந்தியர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆண்டு துருக்கியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார். அவரது வங்காளதேச பயணத்தின்போது, தீஸ்டா நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை.

தெற்கு சீனகடலில் எண்ணெய் அகழ்வு பணியில் இந்தியா எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. இது தொடர்பான சீனாவின் ஆட்சேபனை ஏற்கத்தக்கதல்ல.

பிரதமர் மோடியின் சுறுசுறுப்பான பணி, எனக்கு சவாலாக இல்லை. அவர் எந்த மந்திரிக்கும் கட்டுப்பாடு விதிக்க மாட்டார். எனவே, எனக்கு எப்படி கட்டுப்பாடு விதிப்பார்? நானாகத்தான் அமைதியாக வேலை பார்க்கிறேன்.

ஏனென்றால், வெளியுறவு மந்திரி என்ற முறையில், உள்நாட்டு பிரச்சினைகளை நான் பேசக்கூடாது. அப்படி பேசுவது, எனது சொந்த கருத்தாக பார்க்கப்படாமல், நாட்டின் கருத்தாகவே பார்க்கப்படும். எனவே, அதிகம் பேசக்கூடாது என்று இருக்கிறேன்.

மத்திய மந்திரிகளிடையே யார் நம்பர் ஒன் என்ற போட்டி இல்லை. எல்லோரும் ஒரே குழுவாகவே பணியாற்றுகின்றனர்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply