திருமலைச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரி. எம். வி. பி.
கடந்த 11ம் திகதி திருமலையில் இடம் பெற்ற வர்ஸா என்கின்ற சிறுமியின் கொலையானது எம்மை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித நாகரிகமற்ற இச்செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இக்கொலையில் சம்பந்தப்பட்ட கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது என்பதோடு கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் ஒருவர் எமது அமைப்பின் ஆதரவாளர் என்பது எமக்கு பெரும் வேதனையளிக்கும் செய்தியாகும்.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதக் கும்பலுடன் எமது ஆதரவாளரான ஜனா என்பவர் கொண்டிருந்த தொடர்புகள் அவரது தனிப்பட்ட நடவடிக்கையாகும். இதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்புகளோ கிடையாது என்பதை மக்களுக்கு தெளிவுறுத்த விரும்புகிறோம்.
கிழக்கு மாகாணமெங்கும் பரந்துபட்ட ஆதரவாளர்களைக் கொண்டுள்ள எமது கட்சி எனும் வகையில் இது போன்ற சமூக விரோதிகளின் ஆதரவுகளை பெறுவது குறித்து எதிர்காலத்தில் எமது கட்சி மிக அவதானமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி சந்தேக நபர்கள் எதுவித பாரபட்சமுமின்றி விசாரிக்கபட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் இருப்பதோடு அதற்கு பூரண ஒத்தாசை வழங்கவும் எமது கட்சி சார்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் அச்சநிலையை தவிர்த்து பொது மக்களுக்கான ஜனநாயக சூழலை மேம்படுத்த எமது கட்சி உளசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் எம்மை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே குறித்த கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி எமது கட்சிமீது சேறு பூசுவதையும் அவதூறு பொழிவதையும் நோக்காகக் கொண்டு திரிபுபடுத்தப்பட்டு வெளிவருகின்ற செய்திகளையிட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு சிறுமி வர்ஸாவின் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் எமது கட்சி சார்பில் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
(ஒப்பம்)
எ. கைலேஸ்வரராஜா
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
16/03/2009
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply