சாயல்குடி அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதில் தகராறு: அண்ணன்–தம்பி வெட்டிக் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் வேதமணி (வயது60). இவரது தம்பி ஆசீர்வாதம் (56). இவர்கள் அந்த பகுதியில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் கட்ட முயன்றனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான எஸ்.ஆர்.மணி தரப்பினருக்கும், வேதமணி தரப்புக்கும் இடப்பிரச்சினை ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.மணி தரப்பினர் நீதிமன்றம் சென்று தடையை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே நேற்று சாயல்குடி போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு வேதமணியும் ஆசீர்வாதமும், பிரச்சினைக்குரிய இடத்தில் கற்களை இறக்க சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென அவர்கள் மீது தாக்குதலை நடத்தியது.

அவர்களை கண்டதும் வேதமணி மற்றும் ஆசீர்வாதம் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சகோதரர்கள் வேதமணி, ஆசீர்வாதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

காலையில் நடந்த இந்த இரட்டைக்கொலை சாயல்குடி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டதால், அவர்கள் யார்? என போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க கொலை நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply