பிரான்ஸில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க எரிவாயு தொழிற்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அரபு மொழியில் எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலந்தே, இது திட்டவட்டமான பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய நபர்கள் பிரான்ஸ் உளவுத்துறையால் தேடப்பட்டவர்கள் என்றும் ஹாலந்தே குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இது ஒரு அடையாளம் காணாத பயங்கரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்குள் ஐ.எஸ். கொடியுடன் இரு நபர்கள் காரை அதிவேகமாக செலுத்தினர். அந்த சமயத்தில் அந்த இடத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

தொழிற்சாலைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை அங்கு வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே போலீஸாரின் சோதனையில் தொழிற்சாலையின் அருகே தலை வெட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த தலையில், அரபு மொழியிலான வாசகங்கள் கொண்ட கொடி இருந்தது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்துக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் விரைந்துள்ளார்.

முதல் கட்ட விசாரணையின்படி, ஒருவர் அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் தொழிற்சாலைக்குள் வெடிகுண்டுகளை நிரப்பிய காரை செலுத்தி குண்டு வெடிப்பு நடக்க செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொரு தரப்பு கூறுகையில் இரண்டு நபர்கள் காரை எரிவாயு நிரப்பட்ட கண்டெய்னர்கள் மீது மோதி வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலின் தன்மை பற்றி மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தத் தாக்குதல் பிரான்ஸ் போலீஸுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை அலுவலகத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் உள்பட 17 சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply