தேர்தல் திணைக்கள அறிவுரைகளை மீறும் அரச ஊழியர்களுக்கு 03 வருட சிறை

தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அரசாங்க ஊழியர்களை ஆகக்கூடியது 03 வருடங்களுக்கு சிறையில் அடைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வழங்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற் கமையவே தேர்தல்கள் ஆணையாளருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

இந்த நடைமுறை அரசாங்க மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களுக்கு பொருந்துமென்றும் அவர் கூறினார். இதற்கமைய தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை பின்பற்ற மறுக்கின்ற அல்லது தவறுகின்ற அரசாங்க ஊழிய ரொருவருக்கு மூன்று வருட சிறைத்தண் டனை அல்லது ஒரு இலட்சம் ரூபா தண் டப்பணம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

கடந்த கால தேர்தல்களின் போது அதிகாரத்திலிருந்து கட்சிக்கே அரசாங்க நிறுவன ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேர்தல்கள் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும் அதனை ஊர்ஜிதம் செய்திருந்தன.

எனினும் 19ம் திருத்தத்திற்கமைய பக்கசார்பாக நடக்கும் அரசாங்க ஊழியர்கள் மீதும் மேற்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போதும் 19வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை இவரே தொடர்ந்தும் தேர்தல்கள் ஆணையாளராக பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாராளுமன்றம் கடந்த 26 ஆம் திகதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த தேர்தலுக்கான பணிகள் துரிதப்படுததப்பட்டுள்ளன.

அதன்படி ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 03 இலட்சம் பேர் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவரெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

வேட்பு மனுக்கள் ஜுலை 06 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் சுயேச்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை இப்போதிலிருந்தே செலுத்த முடியு மென்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்புக்கமையவே இந்த பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட 64 கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன. வேட்பு மனுக்கள் அச்சிடும் பணி துரிதமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

சுயேச்சைக்குழுவில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 2 ஆயிரம் ரூபாவினை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

கூட்டணி அமைத்துப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பெயர் விவரங் கள் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பாராளுமன்றம் தேர்தலுக்காக 400 கோடி ரூபா செலவாகுமென தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

அதேபோன்று ஜுலை 06 ஆம் திகதி முதல் தேர்தல் முடிவடையும் வரை அரச சேவை மற்றும் காவல்துறை சேவையின் சகல இடமாற்றங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் ஜுலை 03 தொடக்கம் ஜுலை 14 ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply