மலாலா மீது தாக்குதல் நடத்தியவர்களை நீதிக்கு முன் கொண்டு வாருங்கள்

பெண் கல்விக்காக பாடுபட்டு வரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வாருங்கள் என்று அமெரிக்க செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு மிங்கோரா நகரில் உள்ள பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்புகையில், மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். தலையிலும், வயிற்றிலும் குண்டு பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலாலா தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தெரிக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.

பின்னர், இவ்வழக்கில் அந்த அமைப்பை சேர்ந்த 10 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு ஸ்வாட் நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ரகசியமாக நடைபெற்று வந்ததாக அறிவிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் 10 பேருக்கும் 25 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 8 பேர் வெளியுலகில் சுதந்திரமாக நடமாடுவதாக அண்மையில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதையடுத்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானிக்கு கடிதம் எழுதியுள்ள அந்நாட்டு செனட்டர்களான மார்கோ ரூபியோ மற்றும் பார்பரா பாக்ஸர் ஆகியோர், “இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் வகையில், பாகிஸ்தான் அரசு இரட்டை மடங்கு வேகத்துடன் வெளிப்படையாகவும், பொதுவான வகையிலும் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

‘மேலும் இந்த வழக்கின் விசாரணை ரகசியமாகவும், தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் நடைபெற்றதற்காக கவலையடைந்த போதிலும், பாகிஸ்தான் நீதித்துறை இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேகமாக செயல்பட்டதை கண்டு திருப்தியடைந்தோம். ஆனால் சமீபத்திய பத்திரிகை செய்திகள் இவ்வழக்கில் தண்டனை பெற்ற சிறைக்கு வெளியே குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் அந்நாட்டின் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே இவ்விஷயத்தில் பாகிஸ்தான் அரசு வெளிப்படைத்தன்மையை கடைபிடித்து பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இரு செனட்டர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply