தனிவழியைத்தடுக்க இறுதி நேரத்திலும் பிரயத்தனம் : இன்று முடிவு அறிவிப்பு; களம் இறங்குவாரா மஹிந்த?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தனி வழி செல்லவிடாது ஒன்றிணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு நேற்று இறுதிநேரத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ் தர்கள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட சுதந்திரக் கட்சி
யின் 6 பேர் அடங்கிய குழு நேற்று தமது அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித் துள்ளது.
இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை கண்டியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஐ.ம.சு.மு.வின் செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தே எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விளக்கியுள்ளதாக தெரிகின்றது.
இந்தச் சந்திப்பையடுத்து நேற்று மாலை ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டுமென்று அவரது ஆதரவு அணிகோரிவருகின்றது.
ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகை எம்.பி.க்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் நிற்பதாகவே தெரிகின்றது.
இந்த நிலை நீடித்தால் தான் தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அவரை தனிவழி செல்ல விடாது ஒன்றிணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தலில் களமிறங்கும் வகையிலேயே சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் இறுதி நேரத்தில் பெரும்பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக நியமிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அமைச்சர்களான ராஜித சேனாரத்ன சம்பிக்க ரணவக்க ஆகியோர் இருப்பதாக தெரிகின்றது. இந்த விடயத்தில் ஹெலஉறுமயவின் இணைத்தலைவரான அத்துரலிய ரத்ன தேரர் மாறுபட்ட கருத்தைக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர் வலியுறுத்திவருவதாக கூறப்படுகின்றது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது முடிவினை அறிவிக்கவுள்ளார்.
மெதமுலன்னவில் இடம்பெறும் விசேட நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சுதந்திரக்கட்சியின் முன்னாள் எம்.பி.க்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் உட்பட பெருமளவான ஆதரவாளர்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply