பிரதமராக வர விரும்புபவர் இருக்கவேண்டிய இடம் சிறை என்கிறார் சந்திரிகா
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நபர் வீட்டில் வாய் மூடி இருக்க வேண் டும். அட்டை போல் அரசியலில் ஒட்டிக்கொண்டு மக்களின் இரத்தத்தை குடிக்க நினைக்கக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். நாட்டில் சட்டமும் நீதியும் சரியாக செயற்பட்டால் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்க நினைக்கும் ஒருசிலர் சிறையில் தான் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண் டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டதாவது; இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகள் மிகவும் மோசமான காலமாகும். மனிதாபிமானமற்ற வகையிலும் ஜனநாயகத்தை அழிக்கும் வகையிலும் ஆட்சியாளர்கள் நடந்துகொண்டனர். அவ்வாறான நிலையில் கடந்த ஜனவரிமாதம் ஜனாதிபதித் தேர்தலுடன் மக்கள் பலரை நிராகரித்து விட்டானர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியை மக்கள் தோற்கடித்து விட்டனர். மக்களின் நம்பிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் அதன் தலைமைத்துவமும் இழந்துவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனநாயக ரீதியில் மக்கள் மத்தியில் மனிதாபிமான கட்சி என்று பெயர் எடுத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கறுப்புக்கறைப் படிந்துவிட்டது. சர்வாதிகாரப் போக்கில் ஆட்சியை நடத்தி மக்களின் முழுமையான எதிர்ப்பை சம்பாதித்துவிட்டனர்.
நாட்டில் சரியான சட்டம் நடைமுறையில் இருக்குமாயின் கடந்த ஆட்சியில் குற்றமிழைத்த அனைவரும் இன்று சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இன்று சுதந்திரமாக வெளியில் உள்ளனர். நாட்டில் யாரேனும் குற்றம் இழைத்திருப்பின் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னால் அனைவரையும் சமமாகவே நடத்த வேண்டும். குற்றம் செய்தால் சட்டம், நீதிமன்றம் சரியாக செயற்பட்டால் இன்று பிரதமர் பதவி கேட்பவர்கள் என பலர் சிறையில் இருப்பர். அப்படி செய்யாது பரிதாபம் பார்த்ததன் காரணத்தினால் தான் இன்று மீண்டும் நாட்டுக்கு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாவம் பார்த்து அவர்களை அமைதியாக இருக்க இடமளித்துள்ளோம். அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை. அப்படியானவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்க நினைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை தூக்கி நிலத்தில் அடிப்பதற்கு ஒப்பாகும்.
எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தவறு செய்தால் அவருக்கு தண்டனை கொடுத்து அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் அரசியலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் வீடு சென்று வாயை மூடிக் கொண்டு இருக்கவும் வேண்டும். அரசியல் தலைவர் ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பு அதுவேயாகும்.
அதைவிடுத்து தினமும் அரசியலில் தொங்கிக் கொண்டு அட்டை போல இரத்தம் குடிப்பதற்கு முயல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையின் நல்ல பண்பாகாது. கடந்த தேர்தலில் மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர்கள் வீட்டில் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மக்கள் அரசியல் என்பது அதுதான். இலங்கை ஹிட்லர் வாழும் தேசம் அல்ல. கொலை செய்து கொண்டு, ஊழல் செய்து கொண்டு இருக்க முடியாது. அவ்வாறு ஒருசிலர் செயற்பட்டதன் காரணத்தினால் தான் அவர்களை 9 வருட குறுகிய காலத்தில் மக்கள் அனைவரும் அணிதிரண்டு வீட்டுக்கு விரட்டி அடித்தனர்.
மேலும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும். அந்த சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ள மக்களுடன் இணைந்து போராட்டத்தையும் முன்னெடுக்க நாம் தயாராகவே உள்ளோம். என்னுடன் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களும் ஒன்றிணைத்து போராட முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply