தோல்வியின் விளிம்பிலுள்ள புலிகள் இனக்கலவரத்தை தூண்டும் முயற்சி தப்புக்கணக்கு : அமைச்சர் அமீர் அலி
தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் குண்டுத் தாக்குதல்கள் மூலம் மற்றுமொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிடலாம் என தப்புக் கணக்குப் போடுவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அக்குரஸ்ஸ- கொடப்பிட்டி குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர்: இத்தகைய தாக்குதல்களின் பின்னரும் நாட்டில் பெரும்பான்மையினர் அமைதியும் பொறுமையும் காத்து வருகின்றமை பெருமைக்குரியது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றவென்று போராடப் புறப்பட்டவர்கள் எவரையும் புலிகள் உயிரோடு வாழவிட்டதில்லை. இத்தகைய படுகொலைகளால் அகதி முகாம்கள் அப்பாவி மக்களால் நிரம்பியதைத் தவிர வேறு என்ன விளைந்தது?
புலிகள் தமது எதேச்சதிகாரச் செயற்பாடுகளால் தம்மை தமிழ் மக்களின் மீட்பாளர்கள் எனவும் தம்மை வெல்ல யாருமில்லை என்றும் இறுமாப்போடு ஏற்படுத்திக் கொண்டமாயை கள் கலைந்து தற்போது 37 சதுர கிலோ மீற்றருக்குள் சுருங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு திருப்பத்திலும் புறக்கணிப்பையும் அகங்காரத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மொத்தக்குத்தகைக்காரர்களாகத் தங்களைக் கட்டமைத்துக் கொள்வதில் காட்டிய அக்கறையை தமிழ் மக்களின் நலனில் காட்டியிருந்தால் இன்று ஏதோவொரு எல்லையை அடைந்திருக்க முடியும். ஒரு இணக்கப்பாட்டோடு செயற்பட்டிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்க்கை சிதைந்து போயிருக்காது.
இலங்கையில் வாழும் இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை வெல்லக் கூடிய எதனையும் புலிகள் செய்ததில்லை.
பள்ளிவாசல்களில் மத நிகழ்வுகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கொலைகளை வழிமுறையாகக் கொண்ட எந்தக் கொம்பனும் வெற்றிபெற்றதில்லை. எல்லாம் ஒரு கட்டத்தில் முடிவுற்றுவிடும். நீதியும் நியாயமும் நிலைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply