இன மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து கறுப்புக் கொடி ஏற்றுமாறு அழைப்பு : திருகோணமலை வாழ் பொது மக்கள்
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி யூட் றெஜி வர்ஸாவின் நினைவாக நாளை (மார். 18)புதன்கிழமை அனைத்து பாடசாலைகள் அலுவலகங்கள் தனியார், அரச வேலைத் தளங்கள், வியாபார ஸ்தலங்கள், கடைகள், வீடுகள், அனைத்தின் முன்னால் கறுப்புக் கொடிகளை கட்டி துன்பத்தை வெளிப்படுத்துவதுடன் துஷ்டர்களுக்கு எச்சரிக்கையையும், எதிர்ப்பையும் இன மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து வெளிப்படுத்த முன்வருமாறு ’திருகோணமலை வாழ் பொது மக்கள்’ சார்பில் ஒரு துண்டுபிரசும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தின் உள்ளடகம் வருமாறு;
கொலுவேறும் கொடுமைகள் அழிக்க இன வேறுபாடின்றி இணைவோம்
’’துடிதுடித்து ஓர் உயிர் பறிபோனது
படிக்கப் போன மாணவப் பறவை
பாதகர் கையில் பதை பதைத்து படுகொலையானது
பாரெங்கும் கண்டிக்காதோ இச்செயலை
நெஞ்சம் பொறுக்கவில்லையே – இந்த
நிலை கெட்ட செயலை நினைத்து விட்டால்”
நினைவுகள் அழிந்து அதிர்வினில் இதயம் வெடிக்க கண்ணீரில் நனைந்தது திருகோணமலை.
பெற்ற உள்ளங்கள் ஒரு தாய் மக்கள் என்பதை வெளிப்படுத்தி,உணர்வழித்து துன்பத்தில் மூழ்கினர்.
தெருவெங்கும் மனிதக் கண்ணீர். சிறுபாலகி பள்ளிப்பந்தலில் பறந்து திரிந்தவேளை கவரப்பட்டாள் கல்நெச்சுக்காரரால். கொடுமையின் உக்கிர அராஜகத்தை அரங்கேற்றினர். கொடியோர் பணத்தையே குறியாகக் கொண்ட பாதகர்கள் மென் உடலை துவசம் செய்து அன்புருவான ஆத்மாவை பிரித்தனர்.
கல்விச்சாலைகளில் கற்பிப்போர், கற்போர், அன்னையர், தந்தையர், சகோதரர்கள் அனைவரும் சிந்திய கண்ணீர் இலங்கை மக்களின் ஜக்கிய நதியானது. மானிட தர்மத்தை குழிதோன்றிப் புதைக்கும் குரூர மனச் சிதைவாளர்களை மன்னிக்க முடியாது. மன்னிக்கவும் கூடாது. இது போல் இனியெங்கும் நடக்கவும் கூடாது. நடக்க நாம் அனுமதிக்கவும் கூடாது. தடுத்து நிறுத்த தயங்கவும் கூடாது.
எந்த ஒரு போர்வைக்குள்ளும் அராஜகம் அரங்கேறுவதை அனைத்து மக்களும் கைகோர்த்து ஒன்றுபட்டு நின்று முகம்கொடுத்து தர்மத்தையும், மனிதநேயத்தையும் காப்போம். இந்தப் பிஞ்சுப் பிள்ளையின் பிரிவு எங்கள் நெஞ்சு நிமிர்வுக்கும் வஞ்சகர்களை இனம் கண்டு போரிட உறுதி தருவதாகட்டும்.
ஆகையால் நாளை(18.03.2009) புதன்கிழமை அனைத்து பாடசாலைகள் அலுவலகங்கள் தனியார், அரச வேலைத் தளங்கள், வியாபார ஸ்தலங்கள், கடைகள், வீடுகள், அனைத்தின் முன்னால் கறுப்புக் கொடிகளை கட்டி துன்பத்தை வெளிப்படுத்துவதுடன் துஷ்டர்களுக்கு எச்சரிக்கையையும், எதிர்ப்பையும் இன மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து வெளிப்படுத்துவோம்.
சருதிகள் இனி சாரம் தராது
தளர்ந்த உள்ளங்களே துணிவு கொள்
ஒற்றுமை உளிகொண்டு
வேற்றுமை விலங்கை உடைத்தெறிவோம்
தர்மம் காக்க எழுவோம்
அதர்மம் அழிக்க இணைவோம்
இவ்வண்ணம்
திருகோணமலை வாழ் பொது மக்கள்
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply