ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் ஜனாதிபதி மஹிந்தாவுடன் தொலைபேசியில் உரையாடல்

இலங்கையின் வடபகுதியில் அப்பாவி தமிழ்ச் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களை புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
சிவிலியன் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கு குழிகளை அமைத்துள்ளமைக்கான புகைப்பட ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி, ஐ.நா பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை மீறி அப்பாவிச் சிவிலியன்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
வன்னிச் சிவிலியன்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் பாரிய கப்பல்களின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உணவு மற்றும் ஏனைய நிவாரணப் பொருள் விநியோகம் குறித்த புள்ளி விபரத் தகவல்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்த சூன்ய பிரதேசங்களில் அரசாங்கப் படையினர் தாக்குதல்களை மேற்கொள்வதில்லை எனவும், சிவிலியன் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அகதி முகாம்களில் தங்கியுள்ள சிவிலியன்களுக்கு தேவையான வசதிகள் படிப்படியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அகதி முகாம்களில் தங்கியிருப்போருக்கு ஏன் தொலைபேசி வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன என ஐ.நா பொதுச் செயலாளர் எழுப்பிய கேள்விக்கு, தொலைபேசி ஊடாக விடுதலைப் புலி உறுப்பினர்கள் நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் எனவும், எதிர்காலத்தில் தொலைபேசி வசதிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
விரிவான அரசியல் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதன் மூலம் தீர்வுத் திட்டம் நோக்கி செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
 
ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடல் மிகவும் சாதகமான முறையில் அமைந்திருந்ததென ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply