தமிழர் தாயகத்தை உருவாக்கும் நிலைப்பாட்டை மு.கா.வரவேற்கின்றது : ஹசன்
வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனம் வரவேற்கத்தக்க விடயமாகும். இந்த நிலைப்பாட்டை வெறும் பேச்சில் மட்டும் இல்லாது தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் வென்றெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. இரண்டு சமூகத்துக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது,
முஸ்லிம் மக்களின் தனித்துவம், இருப்பு, அவர்களின் உரிமைகள் என அனைத்து விடயங்களிலும் சம உரிமை வழங்கப்படுவதும், அவர்களது நிலங்கள் பாதுகாக்கப்படுவதும் உறுதிப் படுத்தப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழக தாயக் கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டினை வினவியபோதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழக தாயகத்தை உருவாக்குவதே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால நிலைப்பாடாகும். எமது எதிர்பார்ப்பும் அதுவேயாகும். வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தை உருவாக்குவது என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் ஒருபோதும் மாறவில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்கள் என்ற கட்டமைப்பில் தமிழ் மக்களைப்போல் முஸ்லிம் மக்களும் உள்ளடங்குகின்றனர். இந்த இரண்டு சமூகமும் ஒன்றிணைந்து வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே நியாயமான நிலைப்பாடாகும். குறிப்பாக இரண்டு சமூகங்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது, முஸ்லிம் மக்களின் தனித்துவம், இருப்பு, அவர்களின் உரிமைகள் என அனைத்து விடயங்களிலும் சம உரிமை வழங்கப்படுவதும், அவர்களது நிலங்கள் பாதுகாக்கப்படுவதும் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.
ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களின் இந்த நிலைபாட்டில் பெரும்பான்மை அரசியல் தலைமைகளின் தலையீடுகளும், அவர்களது மத்தியஸ்தமும் ஏற்பட்டு வருகின்றது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான இவர்கள் தலையிடுவது முழுமையான அரசியல் சுயநலத்துக்காக மட்டுமேயாகும். அதை நம்பி எமது தலைமைகள் ஏமாந்துபோவதே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தலைமைகளும், முஸ்லிம் தலைமைகளும் இணைக்கப்பட வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தமிழர் தாயகத்தை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். தமிழர் தாயகத்தை உருவாக்கும் வகையில் தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தலைமைகள் தயாராகவே உள்ளது. தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக வேண்டும். நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்.
அதேபோல் வடக்கையும் கிழக்கையும் ஒன்றினைத்து தமிழர் தாயகத்தை உருவாக்குவதென்பது சாதாரண விடயம் அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் விட்டுக்கொடுப்பையும் சுய உரிமைகளையும் பலப்படுத்துவதுடன் விட்டுக்கொடுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளை சமமாக அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அதுவே சாதகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply