சர்வதேசத்தின் தேவையை பூர்த்திசெய்யும் வகையிலேயே ரணில் செயற்பட்டு வருகின்றார் : டலஸ் அழகப்பெரும
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான விசாரணை அறிக்கைக்கு சாதகமான வகையில் எமது அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. எமது நாட்டின் பிரச்சினைக்கு உள்ளக செயற்பாடுகளின் மூலமே தீர்வு காண்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்தது. சர்வதேசத்தின் தேவையினை பூர்த்திசெய்யும் வகையிலேயே ரணில் செயற்படுகின்றார். ஐ.நா. விசாரணை அறிக்கைக்கு முன்னர் தேர்தலை நடத்துவதும் திட்டமிட்ட சதித்திட்டம் எனவும் அக்கட்சி தெரிவித்தது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதுமே பிரிவினைக்கு துணைபோகும் பிரதான கட்சி என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டதன் விளைவே இந்த நாட்டில் முழுமையாக அபிவிருத்தி முடக்கப்பட காரணமாக அமைந்தது. எனினும் எமது அரசாங்கத்தின் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் நிலைமையினை முழுமையாக மாற்றி அமைத்துள்ளோம்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம், நாட்டில் அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ஆனால் இன்று எம்மீது யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் சர்வதேச பிரிவினைவாத வேலைத்திட்டம் பலமடைந்துள்ளது. அதேபோல் இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வெளிவரவுள்ளது.
அந்த அறிக்கையில் என்ன விடயங்கள் குறிப்பி டப்பட்டிருக்கும் என்பது எம்மால் அனுமா னித்துக்கொள்ள முடியும். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இலங்கைக்கு எதிரானதாகவும் அதனால் இராணுவ வீரர் கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சிலர் தண்டிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை 17ஆம் திகதிக்கு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அறிக்கையின் பின்னர் தேர்தலை நடத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெறமுடியாது என்பதை தெரிந்துகொண்டே இவ்வாறான சூழ்ச்சி யை ரணில் கையாள்கின்றார்.
மேற்கத்தேய நாடுகளின் தேவையினை நிறைவேற்றுவதே ரணிலின் கடமையாக உள்ளது. எரிக் சொல்ஹய்ம், ஒபாமா ஆகியோரின் தேவை என்னவென்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஆதரவாகவே ரணில் செயற்படுகின்றார். ஆகவே இந்த வேலைத்திட்டத்தை முழுமையாக முறியடிக்க வேண்டும். பிரிவினைவாதத்தின் தந்தை ரணில் விக்கிரமசிங்கவேயாவார். அதேபோல் எதிர்வரும் 21ஆம் திகதி வெளிவரவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை மிகவும் மோசமானதாகும். அதை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். எமது ஆட்சியில் நாம் ஒருபோதும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கையினை அனுமதிக்க மாட்டோம். இலங்கையை சர்வதேச மன்றத்தில் தண்டிக்கும் எந்த நடவடிக்கைளையும் நாம் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம். ஏதேனும் குற்றச்சாட்டுகள் இலங்கை மீது இருக்குமாயின் அதனை உள்ளக பொறிமுறையின் மூலமே தீர்ப்போம் எனக் குறிப்பிட்டார்
டிலான் பெரேரா
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகையில்,
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் பிரதிநிதிகள் தமது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவது தொடர்பில் பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது நல்ல விடயம் தான். ஆனால் அவ்வாறு அரசியலில் இருக்கும் நபர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர்கள் அரசியலில் இருந்து விலகவேண்டுமாயின் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில் நாட்டில் நடந்த அநியாயங்கள் மற்றும் அடக்குமுறைச் சம்பவங்கள் அதிகமாக நடந்தன.
அவற்றுக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூறவேண்டியவராவார். குறிப்பாக “பட்டலந்தை” வதை முகாம் ரணிலில் கீழ்தான் இயங்கியது. அப்பாவி மக்களை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதை ரணில் மறந்திருக்க மாட் டார் என்றார்.
அதேபோல் இரண்டாவது நபராக அனுரகுமார திசநாயக்க அரசியலை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் ஜே.வி.பி கலவரம் என்ற பெயரில் சிங்கள மக்களை கொன்று குவித்தனர். பொதுமக்களின் சொத்துக்களையும், அரச சொத்துக்களையும் கொள்ளையடித்தனர். ஆகவே இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் ஜே.வி.பி உள்ளது. ஆகவே முதலில் இவர்கள் இருவரும் அரசியலில் இருந்து விடைபெருவார்கலாயின் அதன்பின்னர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய நபர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply