அமெரிக்காவுக்கு அடிபணிந்தே ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு :வாசுதேவ நாணயக்கார
ஒற்றையாட்சிக்குள் இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போன்று மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும் எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், அதிகாரப் பரவலாக்கலை நாம் எதிர்க்கவில்லை. மாகாண சபைகளுடன் ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பரவலாக்குவோம்.
அவ்வாறு அதிகாரத்தை பரவலாக்கும் போது இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போன்று அதிகாரங்கள் வழங்கப்படும்.இது விடயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணக்கப்பாடு கண்டுள்ளதோடு அதன் கொள்கைப் பிரகடனத்திலும் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பாக ஐ.தே.க.விடம் நிலையான கொள்கையில்லை. சமஷ்டி முறையில் தீர்வு என்றும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்றும் மாறுபட்ட நிலைப்பாடுகளில் ஐ.தே.க.பயணிக்கின்றது.
வரலாற்றுக் காலம் அதாவது சுதந்திரத்திற்கு பின்னர் ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படாது மறுக்கப்பட்டது.பண்டா – செல்வா ஒப்பந்தத்தை அமுல்படுத்த முடியாமல் அதனை ஐ.தே.க.வே தடுத்தது. 1983 இல் ஜூலை இனக்கலவரத்தை ஏற்படுத்தி வடக்கு தமிழ் மக்களை அடக்கு முறைக்குள்ளாக்கி அங்குள்ள இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளிவிட்டது.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை ஐ.தே.க.வே கட்டவிழ்த்து விட்டது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் அடக்கு முறைக்கு அடிபணிந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை பெற்றுக் கொடுத்து தமக்கு தேவையான விதத்தில் இலங்கையில் ஆட்சியை வழி நடத்துவதே அமெரிக்காவின் திட்டமாகும்.
அதற்காகவே கூட்டணி மீது அமெரிக்கா அழுத்தம் ஆதரவு வழங்கச் செய்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ இனவாதியல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply