மருந்து, உணவுப் பொருள் உள்ளிட்ட அவசர உதவிகள் வழங்கும் பொருட்டு யேமனில் போர் நிறுத்தம் அறிவிப்பு

மருந்து, உணவுப் பொருள் உள்ளிட்ட அவசர உதவிகள் வழங்கும் பொருட்டு, யேமனில் ஐந்து நாள்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து அமலுக்கு வந்தது. எனினும், ஆங்காங்கே, கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்றது. ஹூதி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வந்த சவூதி கூட்டுப் படையின் நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக சவூதி அரேபியா அறிவித்தது.சவூதி அரசு ஊடகங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. பொதுமக்களுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிகள் அளிக்க வகை செய்யும் விதமாக, தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கிளர்ச்சியாளர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ தாக்குதலில் ஈடுபட்டாலும், ஆயுதங்களுடன் வாகனங்களில் சென்றாலும், சவூதி கூட்டுப் படை உடனடியாகத் தாக்குதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்கும் என்று சவூதி ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மோக்கா நகரில் மின் உற்பத்தி நிலைய ஊழியர் குடியிருப்புப் பகுதியில், சவூதி கூட்டுப் படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட 120 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து, கூட்டுப் படைத் தாக்குதல் தாற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
எனினும் யேமனில் ஆங்காங்கே ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக சர்வதேச உதவி அமைப்புகள் தெரிவித்தன.
கிளர்ச்சியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவில் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் உயிரிழப்பு நேர்ந்ததா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை.
ஏடன் நகரிலும் வேறு சில இடங்களிலும் இந்த வகை மோதல்கள் திங்கள்கிழமை காலையில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.விடமிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் தங்களுக்கு கிடைக்கவிலை என்று ஹூதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பான ஹூதி புரட்சி கவுன்சிலின் தலைவர் முகமது அலி அல்-ஹூதி கூறினார்.
இப்போது அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் ஒழுங்காகச் செயல்படுமா என்பது சந்தேகம்தான். இதற்கு முந்தைய இரு போர் நிறுத்த அறிவிப்புகளும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போதைய போர் நிறுத்தமானது புதிய போருக்கான தொடக்கமாகத்தான் இருக்கும் எனக் கருதுகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

நியூயார்க், ஜூலை 27: சவூதி கூட்டுப் படையினரின் சண்டை நிறுத்த அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வரவேற்றுள்ளார். நியூயார்க்கில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
யேமன் நாட்டில் மக்கள் அனைவருக்கும் தேவைப்படும் உதவிகளை வழங்கும் பொருட்டு, ஹூதி தரப்பினரும் பிறரும் தங்களது சண்டையை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
யேமனின் அனைத்துப் பகுதிகளிலும் அவதியுறும் மக்களுக்குத் தேவையான உதவிப் பொருள்கள் சென்றடைய அனைத்துப் பிரிவினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply