அப்துல் கலாம் உடல், இன்று ராமேசுவரம் வருகிறது: பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு செய்தி அறிந்து, ராமேசுவரத்தில் வசிக்கும் அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் (வயது 99), அவருடைய மகன் ஜெய்னுலாபுதீன், பேரன் சலீம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, சோகத்தில் கண்ணீர் விட்டனர்.
ராமேசுவரத்தில் உள்ள கலாம் வீடு முன்பு அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. படத்துக்கு நேற்று அதிகாலை முதல் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். வட மாநில சுற்றுலா பயணிகளும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் அங்கு வந்து, மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.
ராமேசுவரத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இன்றும், நாளையும் ராமேசுவரத்தில் கடைகள் அடைக்கப்படுகின்றன. மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்வது இல்லை என அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை அப்துல் கலாமின் வீட்டுக்கு வந்து அவருடைய அண்ணன் மற்றும் உறவினர்களிடம் துக்கம் விசாரித்தனர்.
அவரது இறுதிச்சடங்கு தொடர்பாக கலாமின் பேரன் சலீமுடன் ஆலோசனை நடத்தினார்கள். அதில், ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் அருகே பேய்க்கரும்பு என்ற இடத்தில் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு 1.32 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் உடலை சுமந்து கொண்டு, சிறப்பு விமானம் இன்று (29-ந் தேதி) காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படுகிறது. அந்த விமானம், மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கும். அங்கிருந்து கலாமின் உடல், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக ராமேசுவரத்துக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு கலாமின் வீட்டுக்கு உடல் எடுத்துவரப்பட்டு, அவருடைய அண்ணன், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். வீட்டில் இருந்து ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அப்துல்கலாமின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 7 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின் வீடு அருகே உள்ள பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகை நடத்தப்படுகிறது.
நாளை (30-ந் தேதி) பகல் 11 மணி அளவில் அப்துல் கலாமின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கலாம் இறுதிச்சடங்கையொட்டி ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், “அப்துல் கலாமின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வர உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அனைவரும் மரியாதை செலுத்தும் வகையிலும் போலீஸ் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply