பிரான்சில் முடக்கப்பட்ட புலிகளின் முகவர் அமைப்புகள்
பிரான்சில் வெளிவருகின்ற முதல்தர பத்திரிகைகளில் ஒன்றான லு மோந்த் (Le Monde) இல் 17-03-2009 அன்று, Jacques Follorou எழுதி “பிரான்ஸ் நாட்டின் நீதித்துறை சர்வதேசப் பயங்கரவாத அமைப்பினரான புலிகளின் நிதி வலயங்கள் மீது சட்ட நடவடிக்கை“ எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையை மஹாவலி இணையத்துக்காக தமிழாக்கம் செய்தவர் விஜி.
ஐரோப்பாவில் செயற்படுகின்ற இலங்கை கெரில்லாக்களின் நிதிவலயத்தை வீழ்த்தியதில் பிரான்ஸ் நாடே முன்னிலை வகிக்கின்றது. பாரிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரே இதனை கையாண்டு வருகின்றனர். நீதிபதி பிலிப் குவார் தன்னுடைய புலனாய்வுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் தன்னுடைய தகவல் ஆவணங்களை ஒப்படைக்கவுள்ளார்.
2007 இல் முதன் முறையாக பிரான்சில் உள்ள பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களும் அவர்களது கையாட்களுமாக 20 பேர்வரை கைதுசெய்யப்பட்டு சிறையிலிடப்பட்டனர். புலம்பெயர் தமிழர்களிடம் பயமுறுத்தி பணம் வசூலித்தல் மற்றும் கடத்தல் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் புலிகளுக்காக வேலை செய்வதை ஒத்துக்கொண்ட போதிலும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்துள்ளார்கள்.
1972 இல் இருந்து கொழும்பு ஆளும் தரப்பிற்கு எதிராக போரிடும் இந்த இந்துத்துவ புலிகள் (மாத்தறை பள்ளிவாசல் மீதான புலிகளின் தற்கொலைத்தாக்குதல் பற்றிய பெட்டிச் செய்தியும் வீடியோ பதிவும் லு மோந்த் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மொ-ர்) 75 வீத சிங்கள பௌத்தர்களைக் கொண்ட இலங்கையில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் விடுதலையை கோரிவருகின்றனர்.
உலகில் கடற்படையையும், விமானங்களையும் கொண்டிருக்கின்ற ஒரே கொரில்லா அமைப்பாகவும், ஆசியாவில் நீண்டகாலமாக இயங்கிவருவதுமான அமைப்பாக இவர்கள் காணப்படுகின்றனர். வெளிநாட்டில் வாழுகின்ற தமிழ் சமூகத்தினரிடம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுகின்ற நிதிகளே இவர்களது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த வெளிநாட்டுத் தமிழர்களில் (70,000) எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரான்சில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தலா ஒவ்வொரு குடும்பத்தினரிடம் இருந்து 2.000 ஈரோக்களும் வியாபாரிகளிடமிருந்து 6.000 ஈரோக்கள் வரையிலும் செலுத்துமாறு கட்டாயப் படுத்தப்படுவதாக பயங்கரவாதத்திற் கெதிரான பொலிஸ் பிரிவின் சார்பில் கருத்துத் தெரிவித்த குவார் சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழர் புனர் வாழ்வுக் கழகம்
(TRO) மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC) போன்ற அமைப்புகளில் தொடர்புபட்டவர்கள் என கைதாகியுள்ள சந்தேக நபர்கள் மேற்படி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை மறுக்கின்ற போதிலும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கட்டமைப்புகளின் கணக்கு வழக்குகள் எல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் தலைமைக்கு உட்பட்டே இயங்கிவருகின்றமை உறுதியாகியுள்ளது. இத்தாலிய – பிரன்சுப் பொலிசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக கடந்த 6 ம் திகதி பெப்ரவரி அன்று பாரிஸ் நகரில் வைத்து ஐரோப்பிய அளவில் செயற்பட்டுவரும் தமிழ் மாபியாக்களின் இரண்டாவது தலைவர் ஒருவர் கைதானார். குமார் அல்லது ஜீவா என்றழைக்கப்படும் தர்மலிங்கம் ஜிவகாந் எனும் இவர் எல்.ரி.ரி.ஈ இன் மிகப்பெரிய நிதிமூலங்களின் ஒரு வராவார். இவர் கப்பம் பெறுதல், பயங்காரவாத செயற்பாடுகளுக்கு நிதியுதவி செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பெயரில் இத்தாலிய பொலிசாரினால் தேடப்பட்டு வந்தவராகும்.
சுவிற்சலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஐரோப்பாவாழ் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பொன்று பற்றி இத்தாலி – பிரன்சுப் பொலிசாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இவ்வமைப்பில் 100 க்கும் மேற்பட்டோர் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். எல்.ரி.ரி.ஈ. பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் கூட தொடர்ச்சியாக சுவிட்சலாந்தை அடிப்படையாகக்கொண்டே நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
‘பெரிசு’ என்றழைக்கப்படும் புலிகளின் ஐரோப்பிய தலைவர் ஒருவர் 2008 இல் இத்தாலியப் பொலிசாரினால் தேடப்பட்ட போது அவர் உடனடியாக சுவிட்சலாந்துக்கே தப்பியோடியிருந்தார். இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் கப்பம் கட்ட மறுக்கின்ற போது இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்கின்ற அவர்களது குடும்ப உறவினர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது. ஒழுங்காக கப்பம், செலுத்தாதவர்கள் பற்றிய முழுவிபரங்களையும் கண்டறிய புலிகள் கணனி ஊடான ஆவணப்பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி கப்பம் செலுத்துதலில் ஒழுங்கைப் பேணுபவர்கள் மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு சுதந்திரமாக சென்றவர முடியும். கட்டமறுப்பவர்கள் நாடு திரும்பும் வேளைகளில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு பணம் பறிப்பதற்கென்றே “நந்தவனம்” என்கின்ற மிகப்பெரிய சூறையாடல் நிலையமொன்று இயங்கி வருகின்றது. இலங்கையில் வாழுகின்றவர்களில் நன்கொடை கொடுக்க முடியாதவர்கள் பிரான்சில் உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக அத்தொகைகளை 12 மடங்காக செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். அல்லாத பட்சத்தில் புலிகளது முகாம்களில் கட்டாயவேலை செய்ய பணிக்கப்படுகிறார்கள்.
இத்தாலியிலும் பிரான்சிலும் நடைபெற்றுவரும் விசாரணைகளின் தொடர்ச்சியாக புலிகளினால் எல்லாளன்” எனும் பெயரில் ஒரு கோஸ்டி இயக்கப்பட்டுவருவது தெரியவந்துள்ளது. இவர்களிடமே புலி எதிர்ப்பாளர்களை அழித்தொழிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரான்சில் வாழ்ந்துவரும் ஒரு தொலைக்காட்சி நிலைய இயக்குனருக்கு பாரிசில் விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் பிரசுரத்தில் இந்த எல்லாளன் படையினது பிரன்சுக் கிளையினரின் கையொப்பமே காணப்படுகிறது. எல்.ரி.ரி.ஈ. இற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு பலவருடங்களாக அவருக்கு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கப்ப அறவீட்டாளர்களால் வசூலிக்கப்படுகின்ற மொத்த நிதியில் 30 வீதம் அவர்களது தமிழீழ ஆதரவாளர்களால் வழங்கப்படுகின்றது. 2006 இல் பிரான்சில் வசூலிக்கப்பட்ட தொகை 75 லட்சம் ஈரோக்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தாலியில் 2007 ஆம் ஆண்டில் இவர்களால் 30 – 40 லட்சம் ஈரோக்கள் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. அங்கு 2008 ஆம் ஆண்டு யூன் மாதத்துடன் புலிகளது தொடர்பு மையங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய தடுப்பு பொலிஸ் பிரிவினரும் அவர்களது உள் நாட்டில் இயங்கிவரும் புலிகளின் கிளைகளுக்கெதிராக செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ ஆதரவு இணையத்தளங்கள் ஊடாக நிதி திரட்டப்படுகின்ற ஒரு இரகசிய வலைப்பின்னல் ஒன்றையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.ஜரோப்பிய அளவில் ஒன்றுதிரட்டப்படும் பணம் சுவிட்சலாந்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு வங்கியில் இடப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்திற்கெதிரான போர் நிதியாக இப்பணம் பயன்படுத்தப்படுகின்றது. சுவிட்சலாந்தில் இருந்து தங்கநகை வியாபாரிகள் ஊடாக சிங் கப்பூருக்கு கடத்தப்பட்டே இக்கப்பப் பணங்கள் அங்கு சட்டரீதியான பணமாக்கப்படுகின்றன.
புலிகளால் நடாத்தப்படும் தாக்குதல்களுக்கும் மேற்படி இரகசிய பண பரிமாற்றங்களுக்குமான தொடர்புகளை பிரன்சுப் பொலிசார் கடும் பிரயத்தனங்களுடனான விசாரணைகள் மூலம் பகுத்தறிந்ததின் ஊடாக இவர்களது பயங்கரவாத தன்மைமை அம்பலமாகியுள்ளது. இலங்கையில் இருந்து செயற்படும் புலிகளுக்கும் பிரான்சில் உள்ள புலிப்பிரமுகர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக இப்பயங்கரவாத நடவடிக்கைகளில் 2006 ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கும், 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் இலங்கையில் நடாத்தப்பட்ட பஸ்கள் மீதான 4 தற்கொலைத் தாக்குதல்கள் 101 பேரை கொன்றொழித்துள்ளன. இப்போது ஜரோப்பாவில் இந்த பயங்கரவாத அமைப்பு பாரிய நிலைகுலைவை எதிர்கொண்டுள்ளது. பிரான்சுக்கும் இத்தாலிக்கும் எல்.ரி.ரி.ஈ. பொறுப்பாளர்களால் அனுப்பப்பட்ட புலிகளது தகவல் சேகரிப்பாளர்களும், உளவுப் பிரிவினரும் இந்த நிலைகுலைவை சீர்செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இலங்கையில் தற்சமயம் புலிப்படையினர் கண்டுள்ள பாரிய தோல்வியும், ஜரோப்பாவில் ஏற்பட்டுள்ள நிதி வசூலிப்புச் சரிவும் கடந்த 30 வருடங்களில் புலிகள் கண்டிராதவையாகும்.
நீண்டகாலமாக நடாத்தப்பட்டு வந்த புலிகளது இந்த போராட்டம் சர்வதேச சமூகத்தின அனுதாபங்களை படிப்படியாக பெற்றுவரத் தொடங்கியது. ஆனால் 21-மே-1991 இல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொன்றொழித்ததில் இருந்து இந்தியாவில் இவர்கள் பயங்கரவாதிகளாக கணிக்கப்படலாயினர். அதேபோன்று 29-மே-2006 இல் இருந்து ஜரோப்பிய ஒன்றியமும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் இந்தப் புலிகளையும் இணைத்துக் கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply