ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டும்: அமெரிக்காவில் சுப்பிரமணியசாமி பேட்டி
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களில் ஒரே தகுதியிலான பதவி வகித்தவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஓய்வுபெற்ற கர்னல் புஷ்பேந்திர சிங்கின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்தது. புஷ்பேந்திர சிங்கை பரிசோதித்த டாக்டர் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியதன்பேரில் அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் உண்ணாவிரதம் தொடங்கிய பல ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்களது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர், இந்தப் போராட்டம் பத்தாம் நாளை நெருங்கி, தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் சுப்பிரமணியசாமி, இது தொடர்பாக வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு நாம் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த ராணுவ மந்திரி ஒப்புதல் அளித்தும், நிதிச்சுமையை காரணம் காட்டி, மத்திய நிதி மந்திரி ஆட்சேபித்ததால் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாக இந்தப் பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டும்.
அரசு இயந்திரத்தின் செயல்பாடு தொடர்பான சட்டப்படி, ஒரு விவகாரத்தில் இரண்டு மந்திரிகளுக்குள் வெவ்வேறு வகையான கருத்து நிலவும் நிலையில், அந்த விவகாரம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மத்திய அமைச்சரவையின் சார்பில் இதில் பிரதமர் தலையிட்டு ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் பிரச்சனையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கடந்த 70 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாதாரணமான போராட்டமாக தொடங்கி, காலவரையற்ற உண்ணாவிரதமாக உருவெடுத்துள்ள இந்த போராட்டத்தில் பங்கேற்ற சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சுப்பிரமணியசாமி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply