இலங்கையில் புதிய அமைச்சரவையை நியமிப்பதில் தாமதம்
இலங்கையில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று கூடவுள்ளது. புதிய அமைச்சரவை செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி நியமிக்கப் படுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் அவைத் தலைவர் மலிக் சமரவிக்கிரம நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் பேசிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க புதிய அமைச்சரவை நியமனம் செப்டம்பர் மாத இரண்டாம் தேதிக்குப் பிறகு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
19வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அமைய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்டக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது என்றும் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி கூடும் நாடாளுமன்றம் அதற்குப் பிறகு, மூன்றாம் தேதிதான் மீண்டும் கூடவிருக்கிறது. அதன் பின்னர் சட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும்.
அதற்குப் பிறகே, அமைச்சரவை நியமங்களை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கமொன்றுக்குள் செயற்படுவது எப்படிஎன்பது சம்பந்தமாகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக கூறிய அவர், அந்த ஒப்பந்தத்தில் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துக் கொள்வது சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார்.
ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 95 இடங்கள் இருப்பதால், புதிய அரசில் முக்கியமான அமைச்சகங்கள் கிடைக்கும் என துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.
ஆனால், அமைச்சு பதவிகளை பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் காரணமாகவே அமைச்சரவை நியமனங்களை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தங்கவேலு ஜெயகுமார் கூறுகிறார்.
வழக்கமாக புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வென்றும் தங்கவேலு ஜெயக்குமார் கூறினார்.
இதற்கிடையில், புதிய நடாளுமன்றத்தை செப்டம்பர் ஒன்றாம் தேதி கூட்டுவதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply