சகல இனத்தவரின் சம்மதத்துடன் பக்க சார்பற்ற உள்ளக விசாரணை
பக்க சார்பற்ற நடுநிலையான உள்ளக பொறிமுறையொன்றை சகல இன, மத மக்களினதும் ஒத்துழைப்புடன் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். செப்டெம்பரில் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட இருக்கும் பிரேரணையை சரிவர பயன்படுத்தாவிட்டால் இனியும் சந்தர்ப்பம் கிடைக்காது என முன்னாள் மனித உரிமை விவகார அமைச்சரும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறுகிய காலத்தினுள் பலமான நாடுகளின் நம்பிக்கையை பெற முடிந்திருப்பதாக தெரிவித்த அவர் இந்த சாதகமான நிலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்த போது மைத்திரிபால சிறிசேன தலைமை யிலான அரசினால் அதனை செப்டம்பர் வரை பின்போட முடிந்தது. இது தானாக நடந்ததல்ல. இதற்கான பின்ன ணியை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதானமாக பங்களித்தார். ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற வெற்றியுடன் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை குறித்து நம்பிக்கை ஏற்பட்டது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உள்ளக பொறிமுறையினூடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்திருக்கிறது. அவர் பிரித்தானியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குச் சென்ற போது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மதிப்பும் சாதாரணமான சமிக்ஞையாகவே தெரிந்தன.
நாட்டின் தலைவர் என்ற வகையில் நாம் எதிர்பார்த்திராத தரப்புகளுடன் அவர் தொடர்பை ஏற்படுத்தினார். எமது வெளிநாட்டு கொள்கை எமது நாட்டுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும்.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரேரணையொன்றை அமெரிக்கா அடுத்த மாதம் சமர்ப்பிக்க தயாராவதாக அறிகி றோம். 2009 இல் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அந்தப் பிரேரணையில் உள்ளவற்றை நிறைவேற்ற தவறியதாலே எமது நாட்டுக்கு எதிராக 2013 இலும் 2014 இலும் பிரேரணைகள் நிறைவேற் றப்பட்டன.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் உள்ளக பொறிமுறையொன்றை மேற் கொள்ளுமாறு கோரும் பிரேரணை மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதனை கட்டாயம் செயற்படுத்த வேண்டும். இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டால் அதிலுள்ள விடயங்களையும் கருத்திற் கொண்டு பக்க சார்பற்ற நடுநிலையான உள்ளக பொறிமுறையொன்றை சகல இன, மத மக்களினதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மீண்டும் புலிகள் தலை தூக்கும் நிலை உருவாகாது. உரிய வகையில் உள்ளக பொறிமுறை அமைக்காவிட்டால் இனியும் இலங்கைக்கு வேறு அவகாசம் கிடைக்காது.
குறுகிய காலத்தினுள் பலம் வாய்ந்த நாடுகளின் நம்பிக்கையை வெல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முடிந்துள்ளது. இது நாட்டுக்குக் கிடைத்த சாதகமான நிலைமையாகும். இது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரி விக்கிறோம். இதனை சரிவர பயன்படுத்த வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply