கிரீஸ் நாட்டில் 2 நாளில் குவிந்த 4250 அகதிகள்
உள்நாட்டுப்போர் நடந்து வருகிற சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு அகதிகள் சென்று தஞ்சம் புகுவது அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அகதிகள் வந்து குவிவது ஐரோப்பிய நாடுகளுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், லெஸ்போஸில் இருந்து 1,749 அகதிகளுடன் ஒரு கப்பல், கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் அருகில் உள்ள பிரேயஸ் துறைமுகத்தை நேற்று முன்தினம் சென்றடைந்தது. இதே போன்று நேற்று மற்றொரு கப்பலில் 2,500 அகதிகள் அங்கு சென்று அடைந்தனர்.
இதற்கிடையே மத்திய கிழக்கு பகுதி மக்கள் பலர், ஹங்கேரி நாட்டில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றின் வெளியே தவிப்பதாகவும், அவர்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைவதை போலீசார் தடுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வாரத்தில் மட்டும், கிரீஸ் நாட்டில் 23 ஆயிரம் அகதிகள் குவிந்திருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை அந்த நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அகதிகள் குவிந்துள்ளனர்.
இது தொடர்பாக கிரீஸ் நாட்டின் அதிபர் புரோகோபிஸ் பாவ்லோபவுலோஸ், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயுடன் தொடர்பு கொண்டு பேசினார். அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் அளவில் கூடி விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply