மத்தள விமான நிலைய களஞ்சியசாலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும்
இம்முறை கூடுதல் நெல் அறுவடை கிடைத்திருப்பதால் நெல்லை களஞ்சியப் படுத்தி வைப்பதற்காக மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப் பட்டது. இங்கு தற்காலிகமாகவே நெல் களஞ்சியப்படுத்தப்பட்டபோதும் மத்தள விமான நிலையத்தை மத்திய கால திட்டத்தின் கீழ் பயன்படுத்த இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இம்முறையே கூடுதல் அறுவடை இடம்பெற்றதோடு நெல் கொள்வனவுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஜே. வி.பி குழு தலைவர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப்பதிலளித்த பிரதமர் மேலும் கூறியதாவது,
இலங்கை வரலாற்றில் சிறுபோகத்தில் இந்த வருடத்திலே கூடுதலான நெல் அருவடை செய்யப்பட்டுள்ளது. இம்முறை போகத்தின்போது 160, 500 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டது. வரலாற்றில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்த கூடுதல் தொகை இதுவாகும்.
நெல் கொள்வனவுக்காக விவசாயிகளுக்கு உச்ச விலை வழங்கப்படுகிறது. சம்பா 50 ரூபாவுக்கும் நாடு 45 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகிறது. சகல விவசாயிகளுக்கும் இந்த சலுகை கிடைப்ப தற்காக ஒரு விவசாயிடமிருந்து 2 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.
வரலாற்றில் ஒருபோது மில்லாத அளவு நெல் அருவடை இடம்பெற்றதால் குறைபாடுகள் ஏற்படவே செய்தது. நெல் கொள்வனவுக்கு 180 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் விவசாயிகள் அதிகளவில் குவிந்தனர்.
கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை கேள்வி மனு ஊடாக சிறு மற்றும் மத்திய நெல் ஆலைகளுக்கும் வேறு தரப்பினருக்கும் வழங்க இருக்கிறோம். இதனூடாக அரிசி விலையை சந்தையில் ஒரே மட்டத்தில் பேண திட்டமிட் டுள்ளோம்.
எதிர்வரும் பெரும்போகத்தில் கூடுதல் அருவடை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நெல் கொள்வனவு தொடர்பில் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. நெல் கொள்வனவிற்கு கூடுதல் நிதி ஒதுக்குவ தாலோ கூடுதல் நெல் கொள்வனவு செய்வதாலோ இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.
கொள்வனவு செய்த நெல்லை களஞ்சி யங்களில் இருந்து அகற்ற திட்டமிட வேண்டும். தேவையற்ற விதத்தில் அரிசி யை சந்தைப்படுத்துவது உகந்ததல்ல. மேலதிக நெல் கையிருப்பினால் பெறக்கூடிய பயன் குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது.
விவசாயிக்கும் பாவனையாளருக்கும் உச்ச பயன் மற்றும் சலுகை கிடைக்கும் வகையிலும் இரு தரப்பினரையும் பாதுகாக்கும் வகையிலும் செயற்பட வேண்டும்.
களஞ்சிய வசதிகளை மேம்படுத்த வேண்டும். நெல் மற்றும் அரிசி சார்ந்த புதிய உற்பத்தி குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அரிசியில் தன்னிறைவு அடைய கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. நாம் வேகமாக அரிசியில் தன்னிறைவு கண்டு வருகிறோம். மேலதிக அரிசி கையிருப்பை எதற்கு பயன்படுத்துவது என்ற பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இதற்கு நீண்ட கால தீர்வு வழங்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சகல கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த இருக்கிறோம்.
2013 இல் 44 72 361 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டபோதும் 2, 33,026 மெற்றிக் தொன் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்டது. 2014 இல் 41, 09, 321 மெற்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. 4,56,000 மெற்றிக் தொன்னே கொள்வனவு செய்யப்பட்டது. 2015 இல் 45 இலட்சத்து 49, 758 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்வனவிற்கு 13.6 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட பின்னர் முழுமையாக கவனம் செலுத்துவார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply