நீதிமன்றம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு கருணாநிதி வரவேற்பு
நீதிமன்றம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டு பிரச்சினையில் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறதே?. பதில்:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதற்கு எதிராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட 5 வங்கிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தன. உயர்நிலைப் பொறுப்புகளுக்கான பதவி உயர்வுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் 2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாட்டுடைமையாக்கப்பட்ட 5 வங்கிகள் இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்திய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, 2015 ஜனவரி 9-ந் தேதி அன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக வங்கிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.
அதைப்போலவே மோடி தலைமையிலான மத்திய அரசும் அட்டார்னி ஜெனரல் மூலமாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 1955-ம் ஆண்டில் இருந்தே பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மண்டல் கமிஷன் தொடர்பான வழக்கில் 16௧1௧992 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு என்பது அரசுப் பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வுக்கு மட்டும் பொருந்துமேயன்றி, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், பதவி உயர்வுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்ததைப்போல இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து வழங்குவதற்கு ஏதுவாக இந்திய அரசியல் சட்டம் 17௬௧995 அன்று திருத்தப்பட்டது. எனவே மத்திய பா.ஜ.க. அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனு, இந்திய அரசியல் சட்டத்திருத்தத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வேலை வாய்ப்புகளையும், பதவி உயர்வுகளையும் பெரிதும் பாதிக்கக் கூடியதுமாகும். ‘‘வரும் 10 ஆண்டுகள்
தலித்துகளுக்கான ஆண்டுகளாகும்’’ என்று, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி பேசியதற்கும், தற்போது
மத்திய மோடி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதற்கும் எவ்விதப் பொருளும், தொடர்பும் இல்லாமல் போய்விடும் என்பதோடு, மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை வரலாற்றுப் பிழையாகவும் ஆகிவிடும். எனவே மத்திய அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனுவை உடனடியாகத் திரும்பப்பெற்று, வங்கிகளின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, தலித்துகளுக்கான சமூகநீதி சிறிதும் சிதறி விடாமல் காப்பாற்றுவதற்கு முன் வரவேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி:- ‘‘நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது’’ என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே?.
பதில்:- அவருடைய இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச்செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சும் ஆகும்.
அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறை கருத்துக்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வளர்ந்து வருகிறது; இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.
உச்சநீதிமன்றம் பல்வேறு பிரச்சினைகளில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளை, காலத்திற்கேற்பவும் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்பவும் மாற்றியமைத்து கொள்ளலாம்; என்பன போன்ற கருத்து சிதைவுகள் வேகமாகப் பரவி வரும் இந்நாளில், ‘‘சூப்பர் ஸ்டார்’’ ரஜினிகாந்த், வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் இந்தக் கருத்து, ஜனநாயகத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கதே ஆகும்.
கேள்வி:- தமிழக அரசில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்றாயிரம் செவிலியர் ‘‘டிஸ்மிஸ்’’ செய்யப்பட்டிருக்கிறார்களாமே?.
பதில்:- தமிழக அரசு மருத்துவமனைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் வட்டார சுகாதார அரசு மருத்துவமனைகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 3 ஆயிரம் செவிலியர் திடீரென ‘‘டிஸ்மிஸ்’’ செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 7-ம் தேதிதான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார். வழங்கிய ஒருசில நாட்களுக்குள்ளாகவே ஏற்கனவே பணிபுரிந்து வந்த 3 ஆயிரம் செவிலியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்கதிக்கு ஆளாகி நடுத்தெருவில் நிற்கக்கூடிய பரிதாபமான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே செவிலியர்களையும், மக்கள் நலப்பணியாளர்களை போல நடத்தாமல், தமிழகத்தின் பெண் முதல்-அமைச்சர், பெண் செவிலியர்கள் மீது கருணையும் அக்கறையும் காட்டி, ஒரு கையால் கொடுப்பதும், மறு கையால் பிடுங்கிக் கொள்வதும் என்ற நிலையை மாற்றி, அவர்களைப் பணியில் இருந்து ‘‘டிஸ்மிஸ்’’ செய்யும் நடவடிக்கையைத் திரும்ப பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணி
வழங்கிட நடவடிக்கை எடுத்து, மூன்றாயிரம் குடும்பங்களின் வாழ்க்கை நிலையைக் காப்பாற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply