சர்வதேச விசாரணையை மழுங்கடிக்க கூட்டமைப்பு முயற்சிப்பது வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகம் :சிறீரெலோ
சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பது உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகம் என சிறீரெலோக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மனித இனத்தால் ஜீரணிக்க முடியாத கொடூரங்கள் நடந்தேறியமை உலகறிந்த உண்மை. அவர்களுக்கான குறைந்தபட்ச நீதியையாவது பெற்று விடுவோமென பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளினதும் தன்னார்வ அமைப்புக்களினதும் அர்ப்பணிப்புக்களினாலும், சனல் 04 போன்ற சில சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் முயற்சியின் பயனாகவும் சர்வதேச விசாரணைகளை நெருங்கி விட்டோம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், தான் எதிர்பார்த்தது நடந்து விட்ட மகிழ்சியில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மன மாற்றமும் இம் மாதம் 30 ம் திகதி ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையினை நீர்த்துப்போக வைத்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்த தமிழ் மக்களுக்கு தாங்கள் மலை போல் நம்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமே’ என்று புலம்ப வைத்துள்ளது.
குறிப்பாக கூட்டமைப்பின் தாய்க்கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் இருக்கின்ற ஒருசிலர் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளமையும் அதற்கு கையூட்டாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு நிகரான சலுகைகளைக் கொண்ட பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளமையும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகமும், சர்வதேச விசாரணை தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்க இவர்கள் தாம் பெற்றுக் கொண்ட பதவிகளுக்கு பாராட்டு விழாக்களும் வரவேற்புக் கொண்டாட்டங்களும் பெரும் பொருட்செலவில் நடாத்திக் கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலுள்ளது.
எனவே, நாமும் தொடர்சியாக பல தோல்விகளைச் சந்தித்த போதும் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்புக்கு எதிரான அரசியலை தீவிரப்படுத்த தயங்கியது இவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர் குற்றங்களுக்கும், இனஅழிப்புக்கும் எதிராக புலம்பெயர் உறவுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் எமது அரசியலை கூட்டமைப்புக்கு எதிராக இல்லாமல் அரசாங்கத்தில் இருக்கும் எமது தமிழ் மக்களின் வளப்பறிப்பாளர்களுக்கு எதிராக முன்னெடுத்து வந்தோம். இதனால் பல இழப்புக்களையும் அவமானங்களையும் சந்தித்தோம். இன்று அவை எல்லாமே பொய்த்து விட்டது.
தமிழ் மக்கள் தாம் உணவிற்கு கூட கையேந்த வேண்டிய நிலையில் இருந்து கொண்டும் சலுகைகளுக்கு சோரம் போகாமல் உங்களை நம்பி வாக்களித்து வருகின்றனர். அவர்களுக்கு நீங்கள் துரோகம் செய்வதை அந்த இறைவன் கூட பொறுத்துக் கொள்ளமாட்டான்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தமிழீழ கோரிக்கையை முவைத்து இலங்கையின் இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றியீட்டி இயல்பாகவே எதிர்கட்சி தலைவராக அமர்ந்த பின்பு தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை உதாசீனம் செய்ததின் விளைவை இவ்வளவு காலமும் நாங்கள் அனுபவித்தது போதும், இனியும் உங்களது தான் தோன்றித்தனமான முடிவுகளினால் வரலாற்றுத் தவறுகளை விடுக்கமால் தமிழ் மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள். முடியாவிட்டால் நீங்கள் அரசாங்கத்துடன் இணைவதாக நேரடியாக மக்களிடம் கூறி வாக்குகளைப் பெற்று அரசாங்க சுகங்களை அனுபவியுங்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply