சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி வருகிற அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் என்றும் இந்த கட்டுமானப் பணியை முடிக்க 2 ஆண்டுகள் ஆகும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் நாகராஜன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, சிவாஜி சிலையை அகற்றுவது குறித்த என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘சிவாஜிக்கு அடையாறு ஆந்திரா சபா அருகே மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டிய பின்னர், அங்கு சிவாஜி சிலை மாற்றப்படும்‘ என்று கூறப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘சிவாஜிகணேசனுக்கு அடையாறு ஆந்திர சபை அருகே மணிமண்டபம் கட்டும் பணியை வருகிற அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்டுமான பணி 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்‘ என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள், ‘அரசு கட்டிடங்கள் எல்லாம் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படும்போது, இந்த மணிமண்டபம் கட்டுவதற்கு மட்டும் ஏன் 2 ஆண்டுகள் தேவை? இந்த கட்டிடம் கட்டும் வரை சிவாஜி சிலையை அகற்ற மாட்டீர்களா? ‘என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த அரசு வக்கீல், அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சிவாஜி மணி மண்டபத்தை கட்டி முடிக்கும் கால நிர்ணய அட்டவணையை மாற்றி, விரைவாக கட்டுமானப் பணியை மேற்கொள்வது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அரசு வக்கீல்கள் கூறினார். எனவே, இந்த வழக்கை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்‘ என்று கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply