கிரானைட் குவாரியில் நரபலி: தோண்ட தோண்ட எலும்பு கூடுகள் : அதிர்ச்சி தகவல்கள்

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்குமேல் கிரானைட் மோசடி நடந்ததாக புகார் கூறப்பட்டது. MADURAIஇதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவுபடி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இவரது விசாரணையின் போது பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியோன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பி.ஆர்.பி. நிறுவனம் நரபலி கொடுத்து புதைத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி சகாயம் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சேவற்கொடியோன் குறிப்பிட்ட மேலூரை அடுத்த சின்னமலம்பட்டி மணிமுத்தாறு சுடுகாட்டு பகுதியில் தோண்டும் பணி நடைபெற்றது. சுமார் 5 அடி தோண்டப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் மண்டை ஓடு உள்பட 4 பேரின் எலும்பு கூடுகள் கிடைத்தன. அதில் 2 பெண்களுடையது என தெரியவந்தது.

இந்த 4 எலும்பு கூடுகளையும் ஆய்வுக்காக தடயவியல் நிபுணர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் மீட்கப்பட்ட 4 எலும்பு கூடுகளும் தங்களது உறவினர்களுடையது என சின்னமலம்பட்டியை சேர்ந்த சிலர் போலீசில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி உத்தர வின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சட்ட ஆணையர் சகாயம், மாவட் கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சேவற்கொடியோன் தனது புகாரில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே ஆழமாக குழி தோண்டப்பட்டு உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம். எனவே ஏற்கனவே தோண்டிய இடத்தில் மேலும் 10 அடி குழி தோண்ட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனை ஏற்று நேற்று ஏற்கனவே குழி தோண்டிய பகுதியில் மீண்டும் தோண்டும் பணி தொடங்கியது. கோட்டாட்சியர் செந்தில்குமாரி, மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரியப்பன், மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் குழி தோண்டப்பட்டது.

முன்பு தோண்டிய குழி மூடப்பட்டு இருந்தது. இதனால் குழி தோண்டும் பணி தாமதமாகவே நடந்தது.

இந்த பணி தொடங்கியதும் சகாயம் மற்றும் அவரது குழுவினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். தோண்டி மூடப்பட்ட 5 அடி அளவை தாண்டியதும் மேலும் ஒரு அடி தோண்டிய நிலையில் ஒரு எலும்பு கூடு கிடைத்தது. வெள்ளை வேஷ்டியால் சுற்றப்பட்ட நிலையில் அந்த எலும்பு கூடு காணப்பட்டது. அதன் இடுப்பு பகுதியில் மூக்குப்பொடி டப்பா, புகையிலை பாக்கெட் போன்றவை காணப்பட்டன. அவற்றை தடயவியல் நிபுணர்கள் பத்திரமாக சேகரித்து கொண்டனர்.

தொடர்ந்து பக்கவாட்டில் அகலப்படுத்தி குழியை தோண்டியபோது மேலும் ஒரு எலும்பு கூடு கிடைத்தது. இதற்குள் மாலை 5 மணி ஆகி விட்டதால் அத்துடன் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள் கிடைத்து வருவதால் நரபலி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் நரபலி குறித்து பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, ஊழியர்கள் ஜோதிபாசு, அய்யப்பன், பரமசிவம் ஆகியோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் நரபலி எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்ததாக தெரிகிறது.

இவர்கள் மீது புகார் கொடுத்த சேவற்கொடியோனுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர் வெளியூரில் இருப்பதாகவும், 21-ந்தேதி வருவதாகவும் கூறி உள்ளார். அவர் ஆஜரான பின்னர் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சுற்று வட்டார கிராமங்களில் மாயமானவர்கள் குறித்தும் சேவற்கொடியோன் புகாரில் குறிப்பிட்டுள்ள புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply