உள் நாட்டு விசாரணை நடத்த இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு
இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது விவாதம் நடத்திய பிறகு சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை நடத்த வலியுறுத்தி வருகிறது. அதற்காக உலக நாடுகளிடம் ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் உள் நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை மந்திரி நிஷா தேசாய் பிஸ்வால் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகிறது. நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும், மக்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்த புதிய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இது வரவேற்கதக்கது.
கடந்த 9 ஆண்டுகளில் சாதிக்கப்பட்டவைகளை விட இது அதிகமாகும். எனினும் கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது நிகழ்ந்த இழப்புகளை ஈடு செய்ய இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை.
இலங்கையில் அமைதியும் வளமும் பெருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். சர்வதேச சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும்.
போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அந்த நாட்டு அரசு உறுதியாக இருந்தால் அமெரிக்கா நிச்சயம் தேவையான உதவிகளை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம் நிஷா தேசாஸ் பிஸ்வாஸ் கொழும்பு சென்றிருந்தார். அப்போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு சாதகமாக அமெரிக்கா செயல்படும் என்று உறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை போர்க்குற்றம் குறித்து அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தான் முதலில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது.
தற்போது திடீரென இலங்கைக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 24–ந்தேதி இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் தாக்கல் செய்ய உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply