போர்க்குற்ற விசாரணையை சந்திக்க தயார்: சரத் பொன்சேகா அறிவிப்பு
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிராக இலங்கை அரசும் பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது அதாவது கடந்த 2005 டிசம்பர் முதல் 2009–ம் ஆண்டு ஜூலை வரை சரத்பொன்சேகா ராணுவ தலைமை தளபதி ஆக பொறுப்பு வகித்தார். அவர் போர்க்குற்ற அறிக்கை குறித்து பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
‘‘இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது ராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறேன்’’ அதில் எந்த பிரச்சினையும் இல்லை. தெளிவான மனசாட்சியுடன் இருக்கிறேன்.
நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார். நாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்.
போரின் போது கற்பழிப்பு குற்றங்கள் எதுவும் நடைபெற வில்லை. அதுபோன்ற நடவடிக்கைகளில் ராணுவ அதிகாரிகளோ, வீரர்களோ ஈடுபடவில்லை. இந்திய அமைதிபடை 1987 ஜூலை முதல் 1990–ம் ஆண்டு மார்ச் வரை இலங்கையில் முகாமிட்டிருந்தது.
அப்போது அவர்கள் மீது இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. அதே போன்று ஈழப்போரில் ஈடுபட்ட சிங்களா ராணுவத்துக்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டுகள் பரப்பபட்டுள்ளன.
ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணைக்கு அதாவது இலங்கை அரசு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 2000–ம் ஆண்டு 8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரருக்கு கடந்த ஜூன் மாதம் கொழும்பு ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதுபோன்று உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் இதுபோன்று நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.
அதே நேரத்தில் உள்நாட்டில் வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட்டாலும் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.’’
இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply