சட்டசபையில் இன்று காவல்துறை மானியம்: உறுப்பினர்களின் கேள்விக்கு ஜெயலலிதா பதில் அளிக்கிறார்
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை, 14 நாட்கள் நடைபெற்றுள்ள கூட்டத்தில், 27 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் உள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முதல்-அமைச்சரிடம் உள்ளதுறை என்பதால், பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்றைய சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. அதன்பின்னர், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இதில், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுகிறார். இறுதியில் துறை ரீதியான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.
ஏற்கனவே, பெண் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா மரணம் குறித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் நேற்று அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் சட்டம் – ஒழுங்கு குறித்து பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுப்பார்கள் என தெரிகிறது.
இதனால், இன்றைய சட்டசபை கூட்ட நிகழ்வுகள் கவனமாக உற்றுநோக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply