ராணுவ பயன்பாட்டுக்காக இஸ்ரேலில் இருந்து ரூ.2,500 கோடிக்கு ஆள் இல்லாத விமானங்களை வாங்க இந்தியா முடிவு
பாகிஸ்தான், ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ‘டிரோன்’ எனப்படும் ஆள் இல்லாத சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தினாலும் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படுவதில்லை. இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாலும் அடிக்கடி போர்பதற்றம் ஏற்படுவதாலும் இந்திய ராணுவம் இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ஹெப்ரான் ரக ஆள் இல்லாத விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்து உள்ளது.
இதுபற்றிய சிந்தனை இந்திய ராணுவத்திடம் முன்பே தோன்றிவிட்டாலும் கூட அண்மைக்கால மேற்கண்ட நிகழ்வுகள் இந்த முடிவை எடுக்கத் தூண்டி இருக்கிறது. காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை கண்காணிப்பதற்காக இந்திய ராணுவம் இஸ்ரேலிடம் இருந்து ஏற்கனவே ஆள் இல்லாத வான்வழி கண்காணிப்பு வாகனங்களை வாங்கி இருக்கிறது. இவை காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் மற்றும் சீன பகுதிகளையொட்டி பறந்து ஆக்கிரமிப்பு மற்றும் படைகள் ஊடுருவலை கண்காணித்து வருகின்றன.
எனினும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்தல் மற்றும் போர் பதற்றத்தின்போது ஆள் இல்லாத விமானங்கள்தான் சுய பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். இதை தொடர்ந்தே ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய ஆள் இல்லாத விமானங்களை வாங்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்டீரிஸ்’ நிறுவனத்திடம் இருந்து ஆள் இல்லாத விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. இவற்றில் ஆயுதங்களை பயன்படுத்தி தரைவழி மற்றும் வான்வழி இலக்கு களையும் தாக்குதல் நடத்த முடியும்.
இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் இந்தியா-இஸ்ரேல் இடையே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு (சுமார் ரூ.2,500 கோடி) ஹெப்ரான் ரக ஆள் இல்லாத விமானங்களை ராணுவ பயன்பாட்டுக்காக இந்தியா வாங்கும் என்று கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply