பல்மைரா நகரை மீட்க சிரியா படைகள் பீப்பாய் குண்டு, ஏவுகணை வீச்சு: 100-க்கும் மேற்பட்டோர் பலி

siriya1சிரியாவின் பழம்பெருமை வாய்ந்த நகரம் பல்மைரா. மிகப்பழமையான கலாசார சின்னங்களை கொண்டுள்ள இந்த நகரில் பல கட்டிடங்களை ஐ.நா.வின் யுனஸ்கோ அமைப்பு, பாரம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது. இந்த பல்மைரா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மே மாதம் கைப்பற்றினர். அங்கிருந்த பழமையான பெல் கோவிலை அவர்கள் தகர்த்தனர். பல கல்லறைகளை தரை மட்டமாக்கினர். அந்த நகரின் புராதன சின்னங்களின் பாதுகாவலராக திகழ்ந்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுனர் கலீல் ஆசாத்தை (82 வயது) கடத்தி தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.

 

தற்போது பல்மைரா நகரை மீட்பதில் சிரியா படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் அங்கு கடந்த சில நாட்களாக அவை கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவுக்கு அதன் நேச நாடான ரஷியா போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும், தளவாடங்களையும் சப்ளை செய்துள்ளது.

 

பல்மைராவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பீப்பாய் குண்டுவீச்சு நடத்தியதிலும், ஏவுகணை தாக்குதல் நடத்தியதிலும் 20 ஐ.எஸ். தீவிரவாதிகளும், 12 அப்பாவி பொதுமக்களும் பலியாகினர். இந்த தகவலை சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிரியா படைகள் பல்மைராவில் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் 33 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

 

படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கத்தக்க அளவில் பல்மைரா மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்களும், மருந்துப்பொருட்களும் இல்லை என ஒரு தகவல் கூறுகிறது. இதனால் படுகாயம் அடைந்தவர்கள் மரணம் அடைய நேரிடுவதாக அந்த மருத்துவமனை டாக்டர் அப்துல் ரகுமான் கூறினார். பலர் ராக்கா மாகாண மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைராவை கைப்பற்றியதும், உள்ளூர் மக்கள் பெரும்பாலோர் அங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply