இந்தியாவோடு சேர்த்து உலகையும் மோடி மாற்றுவார்: அமெரிக்க ஐ.டி. துறை தலைமை அதிகாரிகள் நம்பிக்கை
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி, இந்தியாவோடு சேர்த்து உலகையும் மாற்றுவார் என நம்புவதாக அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி கலிபோர்னியாவின் சான் ஜோஸில் அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை (சி.இ.ஓ) சந்தித்து பேசினார்.
அமெரிக்க நிறுவனங்களுடனான தொழில்நுட்ப உறவை மேம்படுத்தும் விதமாக இந்த சந்திப்பில் சிஸ்கோ தலைமை செயல் அதிகாரி ஜான் சாம்பெர்ஸ், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியுடன் பேசினார். ‘நீங்கள் இந்தியா மற்றும் உலகை மாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர்.
பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு தொழில்தொடங்க வருமாறு அழைப்புவிடுத்தார்.
முன்னதாக இந்திய மீடியாக்களுக்கு பேட்டி அளித்த, சத்யா நாதல்லா, இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றேன். இந்தியாவில் மைக்ரோசாப்ட் 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்திய தொழில் முனைவோர்கள் உலக தரம் கொண்டவர்கள். இந்தியாவின் மனிதவளமானது உலகத் தரமானது.
டிஜிட்டல் இந்தியா குறித்த, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையானது மிகவும் சரியானது. சரியான வழியில் கொள்கைகளை புகுத்தி வருகிறார். கிராமங்களையும் இணையத்தின் வழியாக இணைக்க அவர் முயற்சி செய்து வருகிறார் என்று கூறினார்.
கூட்டத்தில் சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் சாம்பெர்ஸ் பேசுகையில், நீங்கள் இந்தியா மற்றும் உலகை மாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர் மோடி உலகளாவிய பார்வையை கொண்டு உள்ளார், அவர் உலகின் தற்போதைய நிலையை தெரிந்து வைத்து உள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டமானது, டிஜிட்டல் பிளவுகளின் சவால்களுக்கு தீர்வுகளை கொண்டு வரும். என்று கூறினார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பேசுகையில், புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி துரிதமாக செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதிலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பார்வையை பகிர்வதிலும் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம், இந்தியாவை முன்னேறுவதில் பிரதமர் மோடி உறுதி கொண்டு உள்ளார். தொழில்நுட்பத்தில் இந்தியா வெகுவாக முன்னேறி வருகிறது. தொழில்நுட்பங்கள் மூலம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply