இலங்கைக்கு ஆபத்தான வகையிலேயே தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது : மஹிந்த ராஜபக்ஸ
இலங்கைக்கு ஆபத்தான வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தேச தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பிலான தீர்மானத்தில் தீங்கான விடயங்கள் காணப்படுவதாகவும் அவை நீக்கப்பட வேண்டுமெனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு சாதகமான அடிப்படையில் காணப்படுவதாகவும் தெரிவித்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் யுத்தக் குற்றச் செயல்கள் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை பின்பற்றுமாறு ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி , தீர்மானம் சமர்ப்பித்த நாடுகளிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச தீர்மானத்தின் 6ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெளிநாட்டு நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களைக் கொண்ட நீதிமன்ற விசாரணை செயன்முறைமை என்பது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் முழுக்க முழுக்க உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக உள்நாட்டு நீதிமன்றங்கள் விசாரணை நடத்தும் என கூறிய போதிலும், 6ம் பந்தியில் வேறு விடயமே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தேச தீர்மானத்தின் 4ம் பந்தியில் இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு சக்திகள் நிதி உதவிகளை வழங்கக் கூடிய பின்னணி உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படையதிகாரிகள் பதவிகளில் அமர்த்தப்படுவதனை தவிர்க்குமாறு யோசனையின் 8ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார சேவை உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் படையதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அவ்வாறான விடயங்களை காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மெய்யாகவே சரியான இணக்கப்பாட்டுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இலங்கைக்கு பகைமை ஏற்படுத்தக் கூடிய தீர்மானத்தின் சரத்துக்களை அரசாங்கம் நீக்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply