ஐ.நா சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: ஒபாமா ஆதரவு
ஆறு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த பயணத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கு பயணத்தை நிறைவு செய்துவிட்டு நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா. சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை இன்று சந்தித்தார். கடந்த ஒரு வருடத்தில் இருவருக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும். ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடியைக் கட்டிப்பிடித்து உற்சாகமாக வரவேற்றார். இதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரமாக நடந்தது. பின்னர் மோடியும், ஒபாமாவும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோடி பேசுகையில், “ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஒபாமாவிற்கு நன்றி. இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு 21ம் நூற்றாண்டை வரையறுக்கும். பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும். பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இரு தரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான எனது கவலையை ஒபாமாவிடம் தெரிவித்தேன். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான எனது கருத்தினை ஏற்ற ஒபாமாவிற்கு நன்றி. இரு தரப்புஉறவில், பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் முக்கியபங்காற்றும். நிலைக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், பொதுவான கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு பாராட்டத்தக்கது. பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டது. சுத்தமான எரிசக்தி குறித்து இந்தியா கொண்டுள்ள உறுதி அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது. என்றார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பதன் மூலம் ஐ.நா சபையின் நிரந்தர உறுப்பினராகும், இந்தியாவின் கோரிக்கைக்காக பிரதமர் மோடி பல நாட்டு தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா இதற்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply