சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஒபாமா அறிவிப்பு
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட தயார் என்று தெரிவித்துள்ளார்.சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் சில பகுதிகளும், ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ரஷியா ஆதரவாக உள்ளது. உள்நாட்டு போரின் காரணமாக பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் இருந்து சுமார் 1.2 கோடி மக்கள் வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.
உள்நாட்டு போரின் காரணமாக சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சிரியா பிரச்சினை பற்றி குறிப்பிட்டார்.
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ரஷிய அதிபர் புதின் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை ஏற்க முடியாது என்று கூறிய ஒபாமா, சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டுப் போருக்கு முந்தைய நிலைக்கு சிரியா திரும்ப முடியாது என்றும் தனது உரையின் போது ஒபாமா கூறினார். அதாவது, உள்நாட்டு போர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால், அதிபர் பஷர் அல் ஆசாத் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை அவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டார்.
அதேசமயம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலை நியாயப்படுத்திய ஒபாமா, இதற்காக அமெரிக்கா வருத்தப்படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply