சர்வதேசத்தை இணைத்துக்கொண்டதொரு விசாரணையை முன்னெடுக்கவேண்டிய நிலை
குறுகிய காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து காட்டிய எதையும் மஹிந்தவினால் செய்ய முடியாமல் போய்விட்டது. நாட்டுக்கு எதிராக வெளிவரவிருந்த ஐ.நா. வின் பலமான அழுத்தங்களை சமாளித்து நாட்டையும் மக்களையும் ரணில் காப்பாற்றியுள்ளார் என ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் ஐ.நா.வின் செயற்பாடுகள் மிக மோசமானதாக அமைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளதா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி பிரேரணை எவ்வாறு அமைந்துள்ளது என்பது இன்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இலங்கை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை தமது இறுதி அறிக்கையை வெளியிடும் என்பதே பெரும்பாலான தரப்பின் கருத்தாக அமைந்தது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இம்முறை மோசமான கட்டளைகளை ஐ.நா. பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவ்வாறு எந்தவித நடவடிக்கைகளையும் இம்முறை ஐ.நா. மேற்கொள்ளவில்லை. ஆனால் இலங்கை தொடர்பில் கடுமையான அழுத்தங்களை பிறப்பிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்பட்டன என்பதும் உண்மையேயாகும். இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் இன்று எமக்கு நேர்ந்திருக்கும் நிலைமை மிக மோசமானதாகவே அமைந்திருக்கும்.
அதேபோல் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அப்போதே ஏதேனும் விசாரணைகளை நடத்தியிருந்தால் இன்று நாம் சர்வதேசத்தின் முடிவை எதிர்பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. இன்று சர்வதேசம் எமது இராணுவ வீரர்களை சந்தேகக்கண்கொண்டு பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் ஒரு உள்ளக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது. இவை அனைத்தையும் நிரூபிக்க சர்வதேச ரீதியில் அல்லது சர்வதேசத்தை எம்முடன் இணைத்துக்கொண்ட ஒரு விசாரணையை செயற்படுத்தவேண்டியுள்ளது.
உண்மையிலேயே இவ்வாறானதொரு செயற்பாட்டை நாம் விரும்பவில்லை. எமது நாட்டில் நடைபெற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாமே தீர்வு காணவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் ஆரம்பத்தில் இருந்தே நாம் உள்ளக பொறிமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றும் உள்ளக பொறிமுறைகளுக்கு அமையவே அனைத்து விசாரணைகளையும் முன்னெடுத்திருக்க முடியும்.
கியூபா எவ்வாறு தனித்துவ செயற்பாடுகளில் வெற்றிகண்டதோ அதேபோல் நாமும் பலமான தனித்துவ நாடாக செயற்பட்டிருக்க முடிந்திருக்கும். ஆனால் முன்னைய அரசாங்கம் யுத்தத்தை வியாபாரமாக மாற்றி நாட்டில் இனவாதத்தை முன்னெடுத்ததாலேயே இன்று நாம் அனைவரும் சர்வதேசத்தின் கட்டளைகளை தட்டிக்கழிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் நாட்டுக்கு எதிராக வெளிவரவிருந்த பலமான சர்வதேச அழுத்தங்களை நாம் குறைத்துள்ளோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சரியான நகர்வுகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேர்மையான வாக்குறுதிகள் என்பன சர்வதேச அழுத்தங்களில் இருந்து நாட்டை காப்பாற்றியுள்ளது. மஹிந்த ராஜபக் ஷவினால் செய்யமுடியாததை ரணில் விக்கிரமசிங்க செய்துகாட்டியுள்ளார். குறுகிய காலத்தில் ரணில் விக்கிரமசிங்க செய்த எதையும் மஹிந்தவினால் செய்ய முடியவில்லை.
இதுவே இரண்டு தலைமைகளின் வேறுபாடு. ஆகவே எமது அரசாங்கத்தில் நாட்டை விடுவித்துள்ளமை முழு இலங்கை யருக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விடயமாகும். ஆகவே இப்போது நாம் முன்னெடுத் துள்ள திட்டத்தில் சர்வதேசத்தையும் இணைத்துக்கொண்டு நாட்டை காப்பாற்றக்கூடிய ஒரு நகர்வை முன்னெடுப்போம் எனக் குறிப் பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply