நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : பா. நடேசன்
நிபந்தனைகள் எதுவுமின்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தெளிவாகவும் உரக்கவும் யுத்த நிறுத்த கோரிக்கையை உலகின் முன் வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வான் தாக்குதல்கள், தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை போன்றவையினால் வன்னிச் சிவிலியன்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
தனித் தமிழீழம் குறித்து நடத்தப்படும் வெகுசன வாக்கெடுப்பில் மக்கள் அளிக்கும் எந்தவொரு தீர்ப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் பூரணமாக தலைசாய்க்கத் தயார் என நடேசன் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply