ஐ.நா.வின் தீர்மானத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு அழுத்தம் கொடுப்போம் : எதிர்க்கட்சித்தலைவர்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பங்களிப்புக்களை வழங்கவுள்ளதோடு அதற்குரிய அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குவோமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுக் காலை 10மணிக்கு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளி யிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கதாகும். அதில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கான பரிகாரம் கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.
புதிய ஆட்சியாளர்களின் போக்கு வித்தியாசமானதாக காணப்படுகின்றது.
அவர்கள் எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். அதுமட்டுமன்றி புதிய அரசாங்கம் ஐ.நா.சபை உட்பட சர்வதேசத்திற்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக ஐ.நா.சபையின் தீர்மானத்தை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறான நிலையில் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்றுவது குறித்து மேற்கொள்ளப்படும் நியாயமான செயற்பாடுகளுக்க எம்மாலான பங்களிப்புக்களை வழங்கவேண்டும். அது மட்டுமன்றி அவ்விடயங்களை முழுமையாக முன்னெடுப்பதற்குரிய அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் வழங்க வேண்டும்.
ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சிகளின் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதன்போது அனைத்து தரப்பினரும் எழுத்து மூலமான நிலைப்பாட்டை வழங்குமாறு கோரியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக அக்கூட்டத்தில் பங்கேற்றிருக்க போதும் அனைவருடைய கருத்துக்கள் தொடர்பிலும் கூடியாராய வேண்டியுள்ளது.
நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை எட்டுவதற்கான சந்தர்ப்பமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை குழப்பும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. அனைத்து கருமங்களும் பக்குவமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் அரசாங்கத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன் அடிப்படையிலேயே அவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக எதிர்வரும் 31ஆம் திகதியிலிருந்து பாரிய குற்றமிழைத்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை விடுவிப்பது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினர் எமக்கு உறுதியளித்துள்ளார்கள். அந்தச் செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும் பாரிய குற்றங்கள் இழைத்தவர்களாக யாராவது இனங்காணப்படு வார்களாயின் அவர்கள் தொடர்பாக தகவல்கள் பெறப்பட்டு அவர்களின் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப் படமுடியும் என்பது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply