ஜெனீவா யோசனை படையினரை வேட்டையாடும்:மஹிந்த

MAHINDAவெளிநாட்டு நீதிபதிகள், பரிசோதகர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு சட்டத்தரணிகளைக் கொண்டு வருவதற்கு இணங்கியதன் ஊடாக தற்போது நாட்டில் இருக்கின்ற நீதித் துறையை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, அதனோடு இணைந்த சகல நிறுவனங்களுக்கும் மேலதிகமாக புதிய நீதித்துறைசார்ந்த நிறுவனத் தொகுதியை உருவாக்குவதற்காகும். இதனூடாக படையினர் வேட்டையாடப்படுவர் என்று முன்னாள் ஜனாதிபதியும் எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜெனீவா யோசனையினால் நாட்டின் முன்னுள்ள அபாயகரமான நிலைதொடர்பில், கொழும்பு அபயாராம விஹாரையில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனீவா யோசனையில் நான்காவது பிரிவின் பிரகாரம், இவ்வாறான நிறுவனமொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கும் அரசாங்கம், அந்தப் பொறிமுறையை உருவாக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இப்போதே இணங்கியுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட காரணங்களை தேடியறிவதற்கான பொறிமுறை, மேற்குலக நாடுகளின் நிதியின் ஊடாக செயற்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கைக்கு எதிராக யோசனைகளை கொண்டுவரும் நாடுகளினால், யுத்த நீதிமன்றம் செயற்படுத்துமாயின் இங்கு நீதி எவ்வாறு அமுல்படுத்தப்படும்
என்றும் அவர் வினவினார்.

இவ்வாறான யோசனைக்கு இணங்கிய அரசாங்கம், அதனை நியாயப்படுத்துவதற்குப் பல்வேறான தர்க்கங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றது.

எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், அதனைத் தேடியறிவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு எகிப்து பிரஜையான நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டமையானது, இலங்கை நீதித்துறை வலையமைப்புக்குள் வெளிநாட்டு நீதிபதிகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்மாதிரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கே, சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் எகிப்து பிரஜை நியமிக்கப்பட்டார். அவர், நீதித்துறைக்குள் நியமிக்கப்படவில்லை.

பண்டாரநாயக்கவின் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை, சாதாரண நீதிமன்றத்திலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதேபோல, காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடியறிவதற்காக எனது அரசாங்கத்தினால் பரணகம ஆணைக்குழு நிறுவப்பட்டது.

அந்த ஆணைக்குழுவுக்கு, வெளிநாட்டு சட்ட நிபுணர்களினால் எழுத்து மூலமான கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளித்து அதாவது ‘வெளிநாட்டவர்கள் இலங்கை சட்டச் செயற்பாடுகளுக்கு பங்குபற்றுத்தல்’ என்ற முன்மாதிரியின் அடிப்படையிலாகும்.

பரணகமவினால் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் பலரிடமிருந்து சட்டரீதியான விசாரணைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனடிப்படையில், பல வெளிநாட்டு நிபுணர்களின் சட்ட ஆலோசனைகள் கிடைத்தன.

அவ்வாறான வெளிநாட்டு நிபுணர்கள் எழுத்துமூலமான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர் என்பதனை யாவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இதனை, மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு நல்லாட்சியின் கடமையாக இருந்தது. எனினும், அந்த நல்லாட்சி அரசாங்கம் அதனைச் செயற்படுத்தவில்லை.

மனித உரிமைகளை மீறினார்கள் என்று கூறப்படும் இராணுவ வீரர்களுக்கு எதிராக போதியளவான சாட்சிகள் இன்றேல், அவர்கள் நிர்வாகச் செயற்பாட்டின் ஊடாக சேவையிலிருந்து நீக்கப்படுவர் என்ற பரிந்துரை, ஜெனீவா அறிக்கையில் இல்லை என்று நாடாளுமன்றத்தில் சில அமைச்சர்கள் கூறினார்கள். அதனை நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அந்த அறிக்கையில் அவ்வாறான பிரிவொன்று உள்ளது என்பதனை உறுதிப்படக் கூறுகின்றேன்.

மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகளை மீறிய படையினரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கருத்து வலுவாகக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது என்றும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.

இந்த மிகமோசமான யோசனைக்கு, இந்த அரசாங்கம் எவ்விதமான கேட்டும் கேள்வியின்றி இணக்கம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியாத வகையில் சாட்சிகள் இல்லையாயின், எமது சட்டத்தின் பிரகாரம் அது குற்றமல்ல. எனினும், அவ்வாறானவர்களை படையிலிருந்து பதவிநீக்கம் செய்து வெளியேற்றுவதற்கு எவ்வகையில் சட்ட தர்மமாகும்? இது படையினரை வேட்டையாடும் திட்டங்களை விட வேறு என்ன என்றும், அவர் கேள்வியெழுப்பினார்.

எங்களுடைய இராணுவத்தைச் சிறைகளுக்குள் அடைக்கமுடியாமையால், அவர்களை நிர்வாகச் செயற்பாட்டின் ஊடாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு எதிராக முதுகெலும்புள்ள இனத்தைச் சேர்ந்தவர்கள், எவ்வேளையிலும் விழிப்பாக இக்கவேண்டும்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் நாங்கள், மிகவும் அவதானமிக்க தருணத்தில் இருக்கின்றோம் என்பதே எனது எண்ணமாகும். எனவே, இந்த நிமிடத்திலிருந்து தாய்நாட்டை முன்னிலைப்படுத்திச் செயற்படவேண்டியது சகலரினதும் கடப்பாடாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply