சதாம் உசேனும், கடாபியும் உயிரோடு இருந்திருந்தால் உலகம் நன்றாக இருக்கும்: அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கருத்து
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனும், லிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபியும் உயிரோடு ஆட்சியில் இருந்திருந்தால் தற்போதுபோல் வன்முறைக்களமாக இல்லாமல் உலகம் நன்றாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டோனால்ட் ஜான் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் அதிபராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவருமான டோனால்ட் ஜான் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள டோனால்ட், மத்தியக் கிழக்கு நாடுகளில் தற்போது பெருகிவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருபவருமான ஹில்லாரி கிளிண்டன் மீதும் குற்றம்சாட்டியுள்ளார்.
’சில ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தால், சதாம் உசேன் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. அவர் பொல்லாதவர்தான். ஆனால், அவரது ஆட்சிக்காலம் தற்போது இருப்பதைவிட சுமாரான காலமாக இருந்தது. தற்போது, தீவிரவாதத்தின் ‘ஹார்வார்ட்’ ஆக ஈராக் மாறிவிட்டது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாசறையாகவும் ஆகிவிட்டது.
தற்போது மக்கள் தலை துண்டிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார்கள். என்னவாயிற்று? என்று திரும்பிப் பார்க்கப்போனால் லிபியா மிகப்பெரிய பேரழிவாக உள்ளது. ஈராக்கும், சிரியாவும்கூட பேரழிவாகவே உள்ளது. ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோரைச் சுற்றி மத்திய கிழக்கு நாடுகள் வெடித்துள்ளன’ என இந்த பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.
இன்று ஈராக்கில் சதாம் உசேனும், சிரியாவில் முவம்மர் கடாபியும் அதிகாரத்தில் இருந்தால் உலகம் நன்றாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ’நூறு சதவீதம், நிச்சயமாக’ என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் படைபலத்தால் ஈராக்கில் கடந்த 2003-ம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். சொந்த மக்களின்மீது அடக்குமுறையை ஏவியதாக அவர்மீது நடைபெற்ற விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2006-ம் ஆண்டு தூக்கிலிட்டு, கொல்லப்பட்டார்.
லிபியாவில் 42 ஆண்டுகாலம் அதிபராக பதவி வகித்துவந்த முவம்மர் கடாபி, கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியில் பதவியைவிட்டு விரட்டப்பட்டார். தலைமறைவாக ஒரு சாக்கடைக்குள் பதுங்கியிருந்த அவர் புரட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார், என்பது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply