த. தே. கூட்டமைப்பு முன்வைக்கும் பொய்ப்பிரசாரத்தை முறியடிப்பதற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்தின் கூற்றை உலகுக்கு எம்மால் முன்வைக்க முடியும் : அமைச்சர் யாப்பா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து உலகளவில் பிரசாரத்தை முன்னெடுக்கையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் உண்மையை சுதந்திரமாக தெரிவித்ததையிட்டு நன்றி கூறுவதாக ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார்.

இதன்மூலம் நாட்டுக்கும் அரசுக்கும் அபகீர்த்தியையும் அவமரியாதையையும் ஏற்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்து பொதுமக்கள் தங்கியுள்ள, குறிப்பாக கதிர்காமர் கிராமம் உட்பட முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து பார்வையிட்டதன் பின்னரே அவர் பாராளுமன்றத்தில் இவ்வாறு தனது சுதந்திரமான கருத்தைத் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசுவதற்குக் காரணம் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலுள்ள மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கி பராமரிப்பதேயாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு மற்றும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் சென்று அரசுக்கும் இராணுவத்துக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வினோநோகராதலிங்கம் முகாம்களுக்குச் சென்று அரசு மேற்கொள்ளும் நலன்புரி சேவைகள் உட்பட ஏனையவற்றை பரிசீலித்து அரசுக்கு சார்பாக உண்மையை சுதந்திரமாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு விரோதமாக அரசாங்கம் செயற்படுவதாக களங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் பொய்ப்பிரசாரத்தை முறியடிப்பதற்கு இவரது கூற்றை உலகுக்கு எம்மால் முன்வைக்க முடியும். இதையிட்டு அவருக்கு நன்றிகள்.

இதேவேளை, இலங்கையிலிருந்து சென்ற சிலர் ஜெனீவாவில் தமிழ் மக்களின் உரிமையை அரசாங்கம் மறுப்பதாக அங்கு மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றி கூறியுள்ளனர். இதையிட்டு கவலையடைகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே உண்மையை உணர்ந்து அரசுக்கு சார்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவர்கள் சென்று ஆர்பாட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

இதனால் நாட்டுக்கு மட்டுமன்றி அரசு மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையருக்கு இழுக்கையும் அவமரியாதையையும் ஏற்படுத்துமென்பதால் நாம் கவலையடைகின்றோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply