பிரதமரின் பிணை யோசனைக்கு த.தே.கூ எதிர்ப்பு

tnaதடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள் என்றும் விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பு, குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி, தாய்வானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் அவரை சந்திப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது எனினும் இன்னும் இது தொடர்பில் கூட்டமைப்பு எதுவித உத்தியோக பூர்வ அறிவித்தலையும் வழங்கவில்லை.

 

இந்நிலையில், பிரதமர் தலைமையிலான கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோது,

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் செய்ய வேண்டிய கருமங்களை செய்வோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் உயர் பீட உறுப்பினர்களிடம் கலந்துரையாடி வருகின்றோம். அது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் எப்போது கலந்துரையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அது தொடர்பில் இப்போது எதுவும் கூறமுடியாது என்றும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் அனைவருக்கும் அறியத்தருவதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply