புதுமாத்தளனுக்கு அரசாங்கம் மருந்து அனுப்பியதாக அதிகாரி கூறுகிறார்
அரசாங்கம் அனுப்பிய ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தங்களிடம் வந்து சேர்ந்துள்ளதாகவும், அவற்றைக் கொண்டு குறைந்தபட்சம் இரண்டு வார காலமாகவாவது தங்களால் புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனையை நடத்த முடியும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் செயல்பட்டுவரும் கடைசி மருத்துவ உதவி மையம் புதுமாத்தளனில் செயல்பட்டுவரும் இந்த தற்காலிக மருத்துவமனைதான்.
அத்தியாவசிய மருந்துகளுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், மருத்துவமனையை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் முறையிட்டதை அடுத்து மருந்துப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மருந்துப் பொருட்கள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவற்றைக் கொண்டு மேலும் இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்களால் சேவைகளைத் தொடர முடியும் என முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டிருந்தும் கூட மயக்க மருந்து, இரத்தம் ஏற்றப் பயன்படும் பைகள் ஆகியன இந்த முறையும் வந்திருக்கவில்லை என்று டாக்டர் வரதராஜா குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகள் வந்துள்ளதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்குண்டுள்ள மக்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை தொடர்ந்து அனுப்பிவருவதாக அரசாங்கம் கூறிவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply